×

அசர வைக்கும் அரசமரத்தின் கதை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இயற்கையை வணங்குவது நம் முன்னோர்களின் மரபாகும். அதைத் தொடர்ந்து அவற்றைக் கடைப்பிடித்து நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்கிறோம். திரு மரத்தை வழிபடுபவர்கள், அவர்களின் பாவத்தை அடுத்த நாளே போக்கக்கூடிய வலிமை உள்ளது என்கிறார்கள் நம் மகான்களும், ரிஷிகளும். திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பிலம் போன்ற பற்பல பெயர்களால் இம்மரத்தை அழைக்கின்றோம். திருமரம் என்பது வேறு எதுவும் அல்ல, அரசமரமே ஆகும். இம்மரத்தின் பூர்வீகம் இந்தியாவே ஆகும். ஆனால் இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் நேபாளம் போன்ற நாடுகள் தன்னுடையது என்று போட்டி போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடுகிறார்கள். உண்மையில் இம்மரம் இந்தியாவிற்கு மட்டுமே உரிமையானது.

போதிமரம்

அரச குடும்பத்தில் உதித்த சித்தார்த், தன் சுகபோக அரண்மனை வாழ்க்கை, மனைவி, குழந்தை என அத்தனையும் துறந்து, ஞானம் பெறுவதற்காக வெளியே வந்தார். நீண்ட தூரம் நடந்து சென்றார். களைப்பு மிகுதியில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அந்த மரம் போதிமரம். அதன் அடியில் அமர்ந்து, ஆறு ஆண்டுகள் தியானம் செய்தார். அம் மரத்தடியில் ஞானத்தைப் பெற்றார். மேலும், போதிமரமே அரசமரமாகும். இன்றும், புத்தகயாவில் போதிமரம் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. பௌத்தர்கள் போதிமண்டா கோயிலாகக்கொண்டு வணங்குகின்றனர். புத்தர் ஞானம் பெற்ற நாளை, டிசம்பர் எட்டாம் நாளன்று, பன்னாட்டு பௌத்தர்களும், இந்த மரத்தடியில்கூடி வணங்குகின்றனர்.

அசோக சக்கரவர்த்தி, அரசமரத்தை வணங்கி கார்த்திகை மாதம் விழா எடுத்தார். அரசமரம் பட்டுப்போனால், புதிய அரச கன்றுகளை நட்டுவைத்து வளர்த்தார். அதை ஒட்டியே ‘போதி மந்த்ரா’ என்னும் விகாரம் எழுப்பப்பட்டு இங்கு பௌத்த குருமார்கள் சித்தகுப்தா தலைமையில் முப்பதாயிரம் பிக்குகள் கல்வி பயின்றதாகச் சொல்லப் படுகின்றது.

அரசமரத்துக்கு அப்படி என்ன பெருமை என்று பார்ப்போமா?

மரங்களின் அரசன், அரசமர விதைகள், இளம் கன்றுகள் ஆகியவற்றை உலகில் எல்லா பகுதிகளிலும் நடப்பட்டன. அமாவாசை, திங்கட்கிழமை, சந்திரபகவானுக்கு ஏற்றம். அரசமரத்தை நாம் 108 முறை சுற்றி வந்தால், நம்முடைய உடல் ஆயுள் வளம் பெருகும்.

“மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம:’’

அரசமரத்தில், நுனிப்பாகத்தில் பிரம்மாவும், நடுப்பாகத்தில் விஷ்ணுவும், அடித் தண்டுப்பாக்கத்தில் சிவபெருமானும் வீற்றிருப்பதாக ஐதீகம். ஆதலால்தான் அரசமரத்தை நாம் சுற்றிவருகின்ற பொழுது மனநிறைவும், உடல் ஆரோக்கியமும் பெற்று, நிறைவாழ்வு அடைகிறோம். ராஜ விருட்சம் என்று போற்றி அழைக்கப்படும். ஒருவர் அதிகாலையில் 1008 முறை மரத்தை சுற்றிவந்தால், “அஸ்வமேத யாகம்’’ செய்த பலனை பெறலாம். யாகங்களில் உயர்ந்தது “அஸ்வமேதை யாகம்’’ ஆகும்.

கீதையில் அரசமரம்

பாரதப் போரில், அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிறான் கண்ணன். “தர்ம யுத்தத்தில் நாம் நேர்மை நீதியின் பக்கமேதான் இருக்க வேண்டும். உறவினர், வேண்டியவர், ரத்த பந்தம், நன்மையா, தீமையா என்றெல்லாம் ஆலோசிக்கக்கூடாது.

அரசமரத்தைப் போன்று, அகன்று கிளைகள் பரப்பி, நாலுபேருக்கு உதவி செய்யக் கூடிய நிலையில்தான் இருக்க வேண்டும். ஆதலால், மரங்களின் அரசமரத்தை நான் மிகவும் விரும்புகிறேன்’’ என்று உறுதி அளிக்கின்றார். இப்படிப்பட்ட புனித மரம்தான் அரசமரம். ஞானம் பெற வேண்டும் என்றால் இதன் அடியில் அமர்ந்தால், ஞானமும் வளரும் பக்தியும் சிறக்கும்.

“அரசமரம்” என்ற பெயர் எப்படி வந்தது?

திருமூலர் இயற்பெயர் சுந்தரர் என்பதாகும். ஒரு முறை சுந்தரர், ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கின்ற பொழுது பசுக்கள் தன்னுடைய எஜமான் இறந்து கிடந்ததைக் கண்டு அவைகள் அழுதன. சுந்தரர், பசுக்கள் மீது பரிதாபம் கொண்டு இறந்து கிடந்த எஜமானின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்து உயிர் புகுந்தார். பசுக்களை அழைத்து சென்று அவன் வீட்டிலே விட்டுவிட்டார். அந்த பசுக்களின் எஜமானனின் பெயர் மூலன். அவன் வீட்டில் தங்கிவிட்டதால் “திரு மூலர்’’ என்று அழைக்கப்பட்டார். சில நாட்கள் கழித்து, அவன் மனைவியிடம் உண்மையைக் கூறிவிட்டு, அவ்வுடலில் இருந்து பிரிந்து தன் உடலை நோக்கி ஆகாயத்தில் மீண்டும் பறந்து கொண்டிருந்தார், சுந்தரர். அந்த சமயத்தில், பாண்டிய நாட்டு மன்னன் வீரசேனன், ராஜேந்திரபுரி என்னும் நாட்டை ஆண்டு வந்தார். அரவம் தீண்டி உயிரிழந்து கிடக்க, அவருடைய மனைவியான பட்டத்து ராணி குணவதி, கணவனை இழந்து அழுது கொண்டிருந்தாள்.

“ஐயகோ! பகைவர் நம் நாட்டின்மீது படை எடுத்து வருகின்ற சமயத்தில், நீங்களும் எங்களை விட்டுப் பிரிந்ததால், நான் நாட்டை எப்படி காப்பாற்றுவேன்? நாட்டு மக்களினுடைய கதி என்ன?” நான் என் செய்வேன் என்று புலம்பினாள். அவள் புலம்பலில் இருந்த நாட்டுப் பற்றும், மக்கள் மீது கொண்ட அன்பும் திருமூலர் மனதைக் கவர்ந்தது. நாட்டை காப்பாற்ற ஒரு பெண் படுகின்ற பாட்டை எண்ணினார். மன்னனுடைய உடலிலே கூடுவிட்டு கூடு பாய்ந்தார். மன்னர் உயிர் பெற்று எழுந்தார்.

இக்காட்சியை கண்ட ராணியும், நாட்டு மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். அதன் பின்பு நாட்டில் செல்வ செழிப்பும், பயிர்களும் நன்றாக செழிப்பாக வளர்ந்தன. அந்நாட்டில் நோயின் நிழல் கூடப் படவில்லை. நோயின்றி ஆரோக்கியமாக இருந்தனர்.அந்நிய நாட்டினர் எவரும் தன் நாட்டின் மீது படை எடுத்து வரவில்லை. சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது. சுந்தரர் உயிர், மன்னரின் உடலில் மறைந்திருந்து, அவர் பேசுகின்ற பேச்சும், இறைவன்மீது கொண்ட பற்றும், மக்களிடத்தில் கொண்ட அன்பும், நேர்மையையும் சற்று வேறுபாடாக இருப்பதை அறிந்தாள், பட்டத்தரசி குணவதி.

ஒரு நாள், தனிமையில் இருந்த மன்னரிடம் ராணி சில கேள்விகள் கேட்கிறாள்.

“அரசே! தங்கள் இறந்து மீண்டும் உயிர் பெற்றது பெரும் மகிழ்ச்சி. இது உலக மகா அதிசயம்”.

“எனக்கு நீங்கள் எப்படி உயிர்பிழைத்து எழுந்தீர்கள் என்பதைக் கூறமுடியுமா?’’ என்று கேட்டாள். அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதை சுந்தரர் புரிந்து கொண்டார்.
“அரசியே! நீங்கள் நினைப்பது போல நான் அரசன் அல்ல.

உங்கள் கணவர் எப்பொழுதோ இறந்துவிட்டார்”. ராணி அதிசயமாக கண்கள் விரித்து ஆச்சரியத்துடன் பார்த்தாள். “என் பெயர் சுந்தரர். நான் ஆகாய மார்க்கத்தில் செல்லும் பொழுது உங்கள் அழுகை சத்தம் கேட்டு, மனம் ஈர்க்கப்பட்டு கூடுவிட்டு கூடு பாயும் யோகக் கலை முறையில் உதவி செய்தேன்”.  “அப்படி என்றால், உங்களுடைய உடல் எங்கே?” என்று கேட்டாள்.

“என்னுடைய உடலைப் பதப்படுத்தி, ஒரு மரப்பொந்தில் வைத்து இருக்கிறேன்”. என்றார். “யார் கண்ணிலாவது பட்டு உங்கள் உடலை எரித்துவிட்டால்?’’. “காய கல்ப சாதனையால் வைரம் பாய்ந்து இருப்பதால் அவ்வளவு எளிதில் உடலை எரிக்கவோ, புதைக்கவோ முடியாது”. “அப்படி என்ன அபூர்வமான சக்தி?” என்று கேட்டாள் அரசி. “குங்கிலியம், பொரிகாரமும் போட்டு, விராலி இலைகளால் தேகம் தெரியாமல் பரப்பி, அதன் மேல் அகில் கட்டைகளை அடுக்கி, தீமூட்டினால்தான் என்னுடைய உடல் எரிந்து சாம்பலாகும்’’ என்ற ரகசியத்தைகூறி முடித்தார். உடனே காவலர்களை அனுப்பி, பளிங்கர்கள் உதவியுடன் அந்த உடலை எடுத்து, திருமூலர் சொல்லியபடியே உடலை எரித்துவிடுகின்றார். இதை அறிந்ததும் மனம் உடைந்தார், திருமூலர்.

அரசனுடைய உடலைவிட்டு பிரிந்தார் அரசரின் உடலை மரப் பொந்தில் வைத்து,“ஏ.. மரமே! அரசரின் உடலை தாங்கியதால் இன்று முதல் உன்னை அனைவரும் “அரசமரம்’’ என்று அழைப்பர்” என வாழ்த்தினார், சுந்தரர். அதன்பின்பு, சூட்சும உயிருடன் ஆகாயமார்க்கமாக சதுரகிரிக்கு சென்றார்.

திசை பலன்கள்

* ஞாயிற்றுக்கிழமை சூரியனை வணங்கி, அரசமரத்தை நாம் சுற்றி வந்தோம் என்றால், நம் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, நன்மை ஏற்படும்.

* திங்கட்கிழமை சந்திரனுக்கு மிகவும் உகந்த நாள். ஆதலால், சிவபெருமானை வணங்கி மரத்தை சுற்றி வந்து வேண்டிக் கொண்டால், நம்முடைய வாழ்க்கையில், மங்களகரமான சௌபாக்கியம் உண்டாகும்.

* செவ்வாய்க் கிழமை அம்பிகைக்கு உகந்த நாள். அன்று, அன்னையை மனதில் நினைத்துக் கொண்டு, அரசமரத்தை சுற்றிவந்தால், நாம் தொடங்கிய வேலைகள் எல்லாம் தொட்டது துலங்கும்.

* புதன்கிழமை திருமாலுக்கு உகந்த நாள். ஆகவே, பெருமாளை வணங்கி அரச மரத்தை சுற்றி வந்தோம் என்றால், முக்கோடி தேவர்களும் நமக்கு அருள்பாலிப்பார்கள்.

* வியாழனன்று தட்சணாமூர்த்திக்கும், மகாலட்சுமிக்கும் உகந்த நாள். எனவே, இவர்களை நினைத்துக்கொண்டு அரச மரத்தை சுற்றி வந்தோம் என்றால், தீராத கடன் தீரும். மகாலட்சுமியின் அருட்கடாட்சம் நமக்கு கிடைக்கும்.

* வெள்ளிக்கிழமை லட்சுமியையும், குபேரனையும் நினைத்து அரசமரத்தை சுற்றினோம் என்றால், நீங்காத செல்வத்தை அருளாக தருவாள்.

* சனிக் கிழமை விஷ்ணுவை நினைத்து எள், வெல்லம் வைத்து வணங்கி, அரசமரத்தைச் சுற்றி வந்தோம் என்றால், நாம் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்
என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மரக்கிளைகள் ரகசியம்

மரக்கிளை கிழக்கில் நோக்கி இருக்கும் பொழுது, தேவர்கள் வாசம் செய்வார்கள். மேற்கில் விஷ்ணு அமர்ந்து அருள் பாலிப்பார். தெற்கில் சிவன் வரம் தருவார். வடக்கில் பிரம்மா தலையெழுத்தை மாற்றி அமைக்க வழி கூறுவார். இம்மரத்தில், அதிதேவதைகள் வாழ்வதால், அரசமரத்தை சுற்றும் பொழுது மும்மூர்த்திகள், தேவர்களின் அருட்கடாட்சம் நமக்கு கிட்டும்.

அரசாணிக்கால்

திருமணத்தில், விவாக மண்டபத்தில் அரசாணிக்கால் நடுவார்கள். (அரசன்+ஆணை+கால்) காரணம் முற்காலத்தில், திருமணம் செய்யும் பொழுது, அரசரை அழைப்பார்கள். அரசர்,
அத்தனை திருமணங்களுக்கும் சென்று பங்கேற்க இயலாது.எனவே, திருமண அழைப்பை ஏற்று காவலாளிகளிடம் அரசகிளையோடு மூங்கில் கொம்பையும், கொடுத்து அனுப்புவார். அந்த மூங்கில் அரசக்கிளையோடு இணைத்து கட்டி விவாகா பந்தலில் நிற்க வைத்து, அதற்கு தயிர், பால், கோமியத்தினால் அபிஷேகம் செய்து மங்களகரமாக மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து நமஸ்காரம் செய்து திருமண தம்பதிகள் முன்னால் எதிரில் இருக்கும்படி தாலிகட்டி வைத்து அரசனே முன்னிருந்து அவர்களுக்கு திருமணத்தை நடத்துவதாக ஓர் ஐதீகம் உண்டு.

இக்கிளையில் மும்மூர்த்திகளும், தேவர்களும் வசிப்பதால், அவர் முன்னில் திருமணம் செய்து கொள்வது நல்லது. தேவலோகத்தில், தல விருட்சமாக இருக்கும். அதன் கீழ்நின்று நாம் கேட்பதையெல்லாம் கொடுக்கும். இந்த அரசமரத்தை இணைத்து திருமணத் தம்பதியர்கள் நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும், குடும்ப வாரிசுகளும் பெற்று ஓங்கி வளர வேண்டும் என நினைத்து வாழ்த்துவர். இந்த அரசாணைக் காலை நடுவார்கள்.

அரசமரத்தை பெண்கள் ஏன் சுற்ற வேண்டும்?

பெண்களுக்கு இயற்கையே ஒரு வரப் பிரசாதம் கொடுத்திருக்கிறது. ஓர் உயிரை ஈன்றெடுக்கின்ற சிறப்பு பெண்களிடம் மட்டுமே உண்டு. பொதுவாக, மரங்கள் கார்பன்டை ஆக்சைடு எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியேவிடும். ஒரு நாளைக்கு 1808 கரியமில வாயு எனப்படும் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, 2400 கிலோ ஆக்சிஜனை வெளியேவிடும். அதிகாலை நேரத்தில் நாம் மரத்தை சுற்றிவர, நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, பெண்களுக்கு ஏற்படும் மாதச் சுழற்சி மற்றும் இதர சம்பந்தமான சுரப்பிகள் சீர் அடைகின்றன. பிள்ளைப் பேறு கருப்பைச் சுரப்பிகளும் நல்ல முறையில் செயல்பட்டால், பெண்ணினுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அரச மரத்திற்கும் கருப்பைக்கும் என்ன சம்பந்தம்?

அதிகாலை நேரத்தில் மரங்களில் இருந்து ஆக்சிஜன் வெளிவரும் பொழுது, பெண்களினுடைய கருப்பை சுரப்பிகள் நல்ல ஒரு தூண்டுதலோடு விரிவடைந்து, உள்ளே இருக்கக்கூடிய பூச்சிகளும், கிருமிகளும் மற்றும் சில நோய் தொற்றும் செத்தொழியும். அப்பொழுது தூய்மையான காற்று உள்வாங்கி, கருப்பையானது உள்ளே இருக்கின்ற அழுக்குகள், நீர்க்கட்டிகள் போன்றவை எல்லாமும் சுத்தப்படும் என்பதற்காக பெண்ணுக்கும் அரசமரத்திற்கும் அக்காலத்திலே தொடர்புப்படுத்தி வணங்க வேண்டும் என்பதற்காக ஒரு ஐதீகத்தை கொண்டு வந்தனர். அதனால்தான் “அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை’’ என்றும் “அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்’’ என்ற பழமொழிகளும் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆகவே, அரசமரம் என்பது மனிதனுடைய வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுடைய காற்றைத் தரும், ஆண் அரசமரம் என்றும் பெண் வேப்பமரம் என்றும் கூறி இரண்டு மரங்களும் பின்னிப்பிணைந்து வைத்திருப்பார்கள். அரசமரத்தினுடைய காற்றும், வேப்பமரத்தின் காற்றும் நம் உடலுக்கு நல்லதொரு ஆற்றலைத் தரும். அக்காலத்திலிருந்து மாதங்களில் ஆடி மாதம், தை மாதம் என்று அப்பொழுதாவது வந்து அவர்கள் சுற்றுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்ட செய்திகள்.

ஆக நாம் அரசமரத்தைச் சுற்றி நம்முடைய சந்ததியினர் நேர்பட வாழ வழி வகுப்போம். அரசமரத்தை போற்றி வணங்குவோம். அரசமரத்தினுடைய பட்டை, இலை, பட்டை வேர், ஆகியவற்றை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கி அவற்றை தூள் செய்து பாலில் கலந்தோ அல்லது தேனில் குழைத்தோ ஒரு 48 நாட்கள் அருந்தி வரும் பொழுது, பல சிக்கல்கள் நீங்கும் என்று சித்தர்கள் நூலிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, அரசமரம் ஒரு தெய்வீக மரமாக விளங்குகின்றது. நம்மால் முடிந்த அளவு அரசமரத்தை பாதுகாப்போம். மரங்களை நடுவோம். வாழ்க்கையும் தலைமுறை சிறக்க வழி தேடுவோம்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post அசர வைக்கும் அரசமரத்தின் கதை! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...