×

பாடாலூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம்..!!

பெரம்பலூர்: பாடாலூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா கடந்த 14 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் செல்லியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் முள்படுகளம் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக கருவேல முட்கள் வெட்டி வந்து சுமார் 100 மீட்டர் நீளம் 5 அடி உயரத்தில் கடை வீதியில் இருபுறமும் முள்படுகளம் அமைக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முள்ளின் மீது பக்தர்கள் படுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன், அய்யனார் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். விழாவில் பாடாலூர், இரூர், திருவளக்குறிச்சி, தெரணி, ஆலத்தூர்கேட், நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், ஊட்டத்தூர், நெடுங்கூர், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post பாடாலூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம்..!! appeared first on Dinakaran.

Tags : Chelliyamman ,Padalur ,Perambalur ,Chelliyamman Temple Chariotam ,Badalur village ,Aladhur taluk ,Perambalur district ,Ayyanar ,Chelliyamman Temple ,
× RELATED பாடாலூர் செல்லியம்மன் கோயிலில் முள் படுகளம் நிகழ்ச்சி