தென்காசி: பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகள் தப்பிக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் கடந்த மாதம் 17ம்தேதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பள்ளி பாளை என்ஜிஓ காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ்1 மாணவர் அஸ்வின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் பழைய குற்றால பகுதியை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பழைய குற்றாலத்தில் சில தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றுக்குள் விழுந்து விடாதவாறு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெள்ளப்பெருக்கு சமயத்தில் பழைய குற்றாலத்தில் படிக்கட்டுகள் வழியாக வருவதால் சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக பெண்கள் பகுதியில் இருந்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மேடை பகுதியில் ஏறி உயரமான இடத்திற்கு சென்று தப்பித்துக் கொள்ளும் வகையில் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
The post வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பிக்க பழைய குற்றாலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் appeared first on Dinakaran.