×

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. 6ம் ஆண்டு நினைவு தினம்: போராட்டத்தில் பலியானோரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு நினைவேந்தல் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

போராட்டத்தின் போது பொதுமக்களை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடியின் மையப்பகுதியில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். தூத்துக்குடி முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் உருவ படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

The post ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. 6ம் ஆண்டு நினைவு தினம்: போராட்டத்தில் பலியானோரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Sterlite firing ,Thoothukudi ,Sterlite ,Dinakaran ,
× RELATED முக்காணி தாமிரபரணி ஆற்றில்...