×

2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாட திட்டம் அமல் வரைவு பாடம் இணையத்தில் வெளியீடு தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில்

வேலூர், மே 22: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2, 3ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், 406 தனியார் சுயநிதி பாலிடெக்னிக்குகள் என மொத்தம் 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். அதேநேரத்தில், பிளஸ் 2 முடித்திருந்தால் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.

பொறியியல் டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், தொழில் முனைவுத்திறனையும் மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி 2023-2024ம் கல்வி ஆண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. இந்நிலையில் தற்போது 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மே மாதம் 24ம் தேதிக்குள் இணையவழியில் தெரிவிக்குமாறு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவராவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாட திட்டம் அமல் வரைவு பாடம் இணையத்தில் வெளியீடு தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vellore ,Polytechnic colleges ,Dinakaran ,
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே...