×

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

 

வேலூர், ஜூன் 3: காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமியை தனிப்படை போலீசார் ஒடிசாவில் மீட்டனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி நாடோடியாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளையல் வியாபாரம் செய்து வருகின்றனர். தம்பதிக்கு ஒரு மகன், 10 வயதில் ஒரு மகள் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயார் தனது மகளுடன் காட்பாடிக்கு வந்து, பல இடங்களில் வளையல் வியாபாரம் செய்து வந்தார். தொடர்ந்து, அவரது மகள் கடந்த 22ம் தேதி திடீரென மாயமாகி விட்டார். அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்தார்.

எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அந்த சிறுமி தந்தையை பார்க்க ஒடிசாவுக்கு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம் எழுந்தது.
பின்னர், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்தனர் அப்போது அந்த சிறுமி ஒடிசா மாநிலம் செல்லும் ரயிலில் ஏறியது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் சிறுமியின் தாயாருடன் அவளை தேடி ஒடிசா மாநிலம் விரைந்தனர். ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற ரயில் நிலையம் அருகே சிறுமியை ரயில்வே பாதுகாப்பு போலீசார் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அங்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். பின்னர், தாயாரின், அனுமதியோடு, தந்தையிடம் போலீசார் ஒப்படைத்தனர். காணாமல் போன சிறுமியை மீட்க சுமார் 1,300 கிலோ மீட்டர் பயணம் செய்து சிறுமியை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

The post காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Odisha ,northern ,Vellore ,Uttar Pradesh ,
× RELATED வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில்...