×

37,000 அடி உயரத்தில் பறந்த போது விமானம் பயங்கரமாக குலுங்கியதில் ஒருவர் பலி: 30 பயணிகள் காயம்

பாங்காக்: இங்கிலாந்தின் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 211 பயணிகள் மற்றும் 18 விமானப் பணியாளர்களுடன் நேற்று புறப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 3.45 மணி அளவில் அந்தமான் கடல் பகுதியில் விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை நிலவியது. புயல் எச்சரிக்கைக்கு மத்தியில், திடீரென காற்றின் வேகமும் திசையும் மாறியது. இதனால் இறக்கைகள் கட்டுப்பாடின்றி, விமானம் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது.

இதனால் விமானி படுவேகமாக விமானத்தின் உயரத்தை குறைத்தார். 37,000 அடி உயரத்தில் இருந்து 3 நிமிடத்தில் 6,000 அடி உயரம் குறைக்கப்பட்டது. அடுத்த 10 நிமிடத்திற்கும் குறைவாக 31,000 அடி உயரத்தில் பறந்த விமானம், அரை மணி நேரத்தில் பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து இங்கிலாந்தை சேர்ந்த 73 வயது பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 30 பயணிகள் காயமடைந்தனர்.

விமானம் தரையிறக்கப்பட்டதும் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்த பயணியின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக நடுவானில் விமானம் பறக்கும் சமயத்தில் காற்றின் திசையும் வேகமும் திடீரென அதிகரித்தாலும் மாறினாலும் விமானம் குலுங்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு. ஆனால், விமானம் குலுங்கியதில் விமானத்தில் இருக்கும் பயணி உயிரிழப்பது அரிதானது. இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்பாராதவை என்பதால், சீட் பெல்ட் அணியாத பயணிகள் விமானத்தில் தூக்கி வீசப்பட்டு காயமடையும் வாய்ப்புகள் இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

The post 37,000 அடி உயரத்தில் பறந்த போது விமானம் பயங்கரமாக குலுங்கியதில் ஒருவர் பலி: 30 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Bangkok ,Singapore Airlines ,London, England ,Singapore ,Andaman Sea ,
× RELATED Dating செல்ல விடுப்பு தரும் நிறுவனம்!