×
Saravana Stores

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நீடித்து வந்த கோடை வெயிலின் வெப்பம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை ஒட்டி இருக்கிறது. தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கோடை மழை பெய்யத்தொடங்கியதால் வெப்பம் தணிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது. இன்றைய நிலவரப்படி கடலூர், சிதம்பரம், மன்னார்குடி, சுவாமிமலை, கோவை, உதகமண்டலம், தஞ்சாவூர், அரியலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், சின்னசேலம், வாழப்பாடி ஆகிய இடங்களில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

மேலும், தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து, தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 24ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது. அது வட கிழக்கில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் 24ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, தமிழக கடலோரப்பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

The post தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Bank Sea ,Chennai Meteorological Survey ,Dinakaran ,
× RELATED மிக கனமழை பெய்யும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகும் வாய்ப்பு