×

நினைத்தாலே போதும் நரசிங்கன் ஓடோடி வருவார்…

நான்காவது அவதாரம்

பகவான் ஸ்ரீமன் நாராயணன், இந்த உலகைக் காக்க எடுத்த அவதாரங்கள் பல. அதில் மிகவும் சிறப்புடைய அவதாரம் நரசிம்ம அவதாரம். தசாவதாரங்களில் இது நான்காவது அவதாரம். இந்த அவதாரங்கள், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் அமைந்த வியப்பையும், நாம் காண்கிறோம். முதன் முதலில் நீர்வாழ் உயிரினங்கள்தான் தோன்றின. உலகம் வாழ்வதற்குத் தகுதியானதாக இருப்பதற்கு நீர் அவசியம். ‘‘நீர் இன்றி அமையாது உலகு’’ அல்லவா! நீரில் வாழும் உயிரினமான மீன் (மச்ச) அவதாரத்தை எடுத்தார். அடுத்து, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கூர்ம அவதாரத்தை எடுத்தார். மூன்றாவதாக வராக அவதாரத்தை எடுத்த ஸ்ரீமன் நாராயணன், அடுத்த நிலையாக மனித அவதாரத்தை எடுப்பதன் முன்னம், மனித உடலும் சிங்க முகமும் இணைந்த நரசிம்ம அவதாரத்தை எடுத்தார்.

ஆழ்வார்கள் வழங்கிய திருநாமங்கள்

நரமும் சிங்கமும் கலந்த நிலைதான் நரசிங்கம். “நரம்” என்பது மனிதன். அதாவது மனித உருவம். இந்த உருவத்தோடு சிங்க உருவம் கலந்த ஒரு திருவுருவம்தான் நரசிம்மரின் திருவுருவம். ஆழ்வார்கள் நரசிங்கம் என்று அழைப்பதைவிட, ‘‘சிங்கபிரான்’’ என்று அழைப்பதில் இனிமை காண்கிறார்கள். என் “சிங்கபிரான்’’ என்றும், “சிங்கம்’’ என்றும், “அழகியவா’’ என்றும், “அரிவுருவன்’’ என்றும், “சிங்கவேள்’’ என்றும், “செங்கண் ஆளி’’ என்றும், “தெள்ளிய சிங்கம்’’ என்றும் பலபடியாக ஆழ்வார்கள் புகழ்கிறார்கள்.

நாளை என்ற பேச்சு நரசிம்மனிடத்தில் இல்லை

அவசரமாக, நொடி நேரத்தில் எடுத்த அவதாரம் இது, என்று சொல்வார்கள். எல்லா அவதாரங்களையும் நன்கு திட்டமிட்டு எடுத்த எம்பிரான், இந்த அவதாரத்தை, எந்தவித முன்னேற்பாடும் இல்லாத நிலையில் எடுத்தான் என்பார்கள். நரசிம்ம அவதாரத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்று சொன்னால், அவரிடம் வைக்கப்படும் எந்த கோரிக்கையும், எப்படி அவர் உடனடியாக அவதாரமெடுத்து, பிரகலாதனுடைய துன்பத்தைத் தீர்த்தாரோ, அதைப் போலவே நொடி நேரத்தில் துன்பத்தைத் தீர்ப்பான். எனவே, மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறவர்கள், உடனடித் தீர்வுக்காக, ஸ்ரீ நரசிம்மருக்கு பானகம் வைத்து, நெய் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்வார்கள். ‘‘நாளை என்ற பேச்சு நரசிம்மனிடத்தில் இல்லை’’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நரசிம்மரைப் பற்றிய நூல்கள்

நரசிம்மரைப் பற்றிய குறிப்பு இல்லாத புராண நூல்கள் குறைவு. “பாகவத புராணம்’’, “அக்னி புராணம்’’, “பிரம்மாண்ட புராணம்’’, “வாயு புராணம்’’, “ஹரிவம்சம்’’, “பிரம்ம புராணம்’’, “விஷ்ணு புராணம்’’, “கூர்ம புராணம்’’, “மச்ச புராணம்’’, “பத்ம புராணம்’’, “சிவ புராணம்’’, “லிங்க புராணம்’’, “ஸ்கந்த புராணம்’’, என பல புராணங்களில் நரசிம்மரைப் பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு. மகாபாரதத்திலும், நரசிம்மரைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அழகிய சிங்கர்

வைணவத் திருத்தலங்கள் 108. அதில் இரண்டு திருத்தலங்கள் நரசிம்ம அவதாரத்திற்கு உரியவை. ஒன்று அகோபிலம். அகோபிலத்தை, “சிங்கவேள் குன்றம்’’ என்று அழைப்பார்கள். இங்கு எல்லா மூர்த்திகளும் நரசிங்க மூர்த்திகள்தான். அகோபில நரசிம்மர், வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், சக்கர வட நரசிம்மன், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மன் என்றும் 9 நரசிம்மர் கோயில்கள் இருப்பதால், இதற்கு “நவநரசிம்ம திருப்பதி’’ என்று பெயர். வைணவத்தின் மிக முக்கியமான திருமடங்களில் ஒன்று இந்த ஊரின் பெயரில்தான் அழைக்கப்படுகிறது. அகோபில மடம் என்று பெயர். அதன் பீடாதிபதிகளுக்கு ‘‘அழகியசிங்கர்’’ என்றே திருநாமம்.

விரைவாய் பலன் தரும் நரசிம்மர்

தமிழ்நாட்டில், ஆழ்வார்களால் பாடல் பெற்ற நரசிம்ம க்ஷேத்திரம் சோளிங்கர். சோளசிங்கபுரம் என்றும் சொல்லுவார்கள். அரக்கோணம் அருகே இந்த க்ஷேத்திரம் இருக்கிறது. கீழே உற்சவருக்கு ஒரு கோயிலும், மலை மேல் மூலவருக்கு ஒரு கோயிலும் உண்டு. இதுதவிர சிறிய மலை மேல் ஆஞ்சநேயர் கோயிலும் உண்டு. பெரிய மலைமீது உள்ள கோயிலில் யோகநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இவ்வூருக்கு அழகான தமிழில் ‘‘திருக்கடிகை’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “கடிது’’ என்றால் விரைந்து என்றும் பொருள் உண்டு. ‘‘மிக உடையான்றாள் சேர்தல் கடிதினிதே’’ (இனி. நாற்.) என்ற பாடலை விரைவாய் என்ற பொருளுக்கு சான்றாகச் சொல்லலாம். “கடிகை’’ என்றால் நாழிகை என்றும் பொருள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிக்கும். 24 நிமிடங்கள் இந்தப் பெருமானை ஆராதித்தால், அல்லது திருத்தலத்தைச் சேவித்தால் அவர்களுக்கு அத்தனை நலன்களும் கிடைக்கும். அதாவது, குறைந்த நேரத்திலேயே பலன்களை இங்குள்ள நரசிம்மர் விரைவாக (கடிது, கடிகையில்) அளிப்பார்.

ஆண்டாள் வர்ணித்த நரசிம்ம மூர்த்தி

ஆண்டாள் நாச்சியார், கண்ணனை, நரசிம்ம அவதாரம் போல வரவேண்டும் என்று ஒரு பாசுரத்திலே அருளி செய்கின்றாள். மலைக் குகையிலே தூங்குகின்ற சிம்மம், எழுந்து, தீவிழி விழித்து, பிடரி மயிர்களை எல்லாம் சிலிர்த்துக் கொண்டு, உடம்பை முறுக்கிக் கொண்டு, கர்ஜனைசெய்து, வருவது போல கம்பீரமாக நடந்து வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். நரசிம்மாவதாரத்தை முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு ஆண்டாள் இந்தப் பாசுரத்தை அருளிச்செய்திருக்கிறாள்.
“மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்துஅருளாலோர்
எம்பாவாய்’’.

எங்கும் இருப்பவன்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் நாமம், பகவான் ஹரியைக் குறிப்பிடுகிறது. அந்த ஹரி, நரஹரி என்று ஆச்சாரியார்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். காரணம், விஷ்ணு என்றால் எங்கும் பரந்து இருக்கின்றவன். எல்லா இடங்களிலும் கரந்து உறைபவன். அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்; வானிலும் இருப்பான்; மண்ணிலும் இருப்பான். இந்த நிலைதான் ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்குப் பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,
“கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை
மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை
அவை தொறும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே’’
– என்று பாடினார்.

வேத வாக்கியம் சொல்லும் நரசிம்மன்

‘‘அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்’’ என்கிறது வேதம். அவன் பிறந்துவிட்டதால், உண்டானவன் இல்லை. அதைப் போலவே அவன் மறைந்துவிட்டதால் இல்லாதவன் இல்லை. ஈஸ்வரன் ஒருக்காலும் ஜீவனாகிவிட முடியாது. ஈஸ்வரன் அவதரித்தாலும், ஈஸ்வரன்தான். மச்ச, கூர்ம, வராக முதலிய எந்த அவதாரமும் ஒரு தாய் வயிற்றில் தோன்றியதல்ல, நரசிம்மாவதாரமும் அப்படித் தோன்றியது அல்ல. அதனாலேயே “பஹுதா விஜாயதே’’ என்று வேதம் கூறியது. அவன் தன்னுடைய கருணையினாலே திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுத்துக்கொள்ளுகின்றான். சாந்தோக்கியம் ‘‘ஆத்மா தேவானாம் ஜனிதா பிரஜானாம் ஹிரண்ய தம்ஷ்ட்ரோ பபசோ அனசூரி:’’ என்று அவரை வர்ணிக்கிறது. படைத்தவரும் தேவர்களுக்கு ஆத்மாவாகவும் உள்ள அந்த சர்வேஸ்வரன் பளபளப்பான கோரைப்பற்கள் உள்ளவராகவும் எல்லாவற்றையும் உண்பவராகவும் காணப்பட்டார் என்று நரசிம்ம அவதாரத்தை
விளக்குகிறது. நரசிம்ம காயத்ரி மந்திரம் அவருடைய கூர்மையான நகங்களையும் வஜ்ரம் போன்ற கோரைப் பற்களையும் மிகச் சிறப்பாகச் சொல்லுகின்றது. “வஜ்ர னகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத்’’ என்று தைத்திரிய நாராயண வல்லி, நரசிம்மரை விவரிக்கிறது. அதர்வ வேதத்தைச் சேர்ந்த “ந்ருஸிம்ம பூர்வ தாபனீய உபநிஷத்’’ மனித வடிவும், சிங்க வடிவும் கொண்ட நரசிம்மனை சத்தியமாகவும் பரப்பிரம்மமாகவும் விவரிக்கிறது.

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்

இரண்யகசிபுவுக்கு பிரகலாதனைத் தவிர, கிலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதிலே பிள்ளை என்று போற்றப்படுவதாக இருந்தவன் பிரகலாதன். பள்ளியில் படித்து வந்தவுடன், “நீ படித்தது என்ன?” என்று தந்தையான இரண்யன் கேட்கின்ற பொழுது, “எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ, அதைத் தெரிந்து கொண்டேன்’’ என்று பிரகலாதன் பதில் சொல்கிறான். ‘‘என்னுடைய பெயரைத் தெரிந்து கொண்டாயா?’’ என்று கேட்கிறான். “இன்று இருந்து நாளை சாகும் உன்னுடைய பெயரைத் தெரிந்து, இந்த ஆத்மாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்வது சர்வ உலகத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லியவுடன், கோபம் ஏற்படுகின்றது. தன்னுடைய பிள்ளை என்றும் கருதாமல் அழிக்க நினைக்கின்றான். அழிக்க நினைத்த அவனே அழிந்து போனான் என்பதை திருவல்லிக்கேணி பாசுரத்திலே திருமங்கையாழ்வார் மிக அற்புதமாக விளக்குகின்றார்.
“பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத
வாங்கு அதனுக்கு ஒன்று
மோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச்
சீறிவெகுண்டு தூண்
புடைப்பப் பிறை எயிற்று
அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய
தேவைத் திருவல்லிக்கே
ணிக் கண்டேனே’’
இன்றைக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே தெள்ளிய சிங்கம் என்கிற திருநாமத்தோடு நாம் பெருமாளை தரிசனம் செய்யலாம். தெள்ளிய சிங்கம் என்பது தெளிசிங்கமாகி அவருடைய பெயரிலேயே தெளி சிங்கர் வீதி திருவல்லிக்கேணியில் இருக்கிறது.

பக்தியின் உறுதி பிரஹலாதன்

பிரகலாதன், கல்வி பயிலத் தொடங்கினான். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன், ஸ்ரீமன் நாராயணன்தான் கடவுள் என்று சொல்ல, பிரச்னை ஆரம்பித்தது. இரணியன், பிரகலாதனைத் தன் வசப்படுத்த பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன், மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால், பிரகலாதனை கொல்ல முடியவில்லை. மறைபொருளாய் நின்ற மாதவன், பிரகலாதனின் ஒவ்வொரு ஆபத்திலும் அவனைக் காப்பாற்றியே வந்தார். ஆணவத்தில் கொதித்த இரணியன், உன் கடவுள் எங்கே என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் எங்கும் இருப்பார்; எதிலும் இருப்பார்; ஏன் தூணிலும் இருப்பார்; எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.இரணியன் ஒரு தூணைக் காட்டி, “இந்த தூணில் உள்ளாரா?” என்று கேட்க, பிரகலாதனோ, “ஏன், உடைத்துத்தான் பாருங்களேன்” என்று உறுதியுடன் கூறினான். இந்த நம்பிக்கையும், உறுதியும்தான் பிரகலாதன். இரணியன் அந்தத் தூணை உடைக்க, பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகாவரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

பிரஹலாதன் மகிழ்ச்சி

“பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்’’.
நரசிம்மரைப் பார்த்ததும், பிரகலாதனுடைய மகிழ்ச்சி எப்படி இருந்தது என்பதை கம்பனைத் தவிர வேறு யாரும் காட்டவில்லை. நரசிம்மபெருமாளின் சிரிப்பொலியைக் கேட்டு, மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினான். பொலபொலவென்று கண்ணீர்விட்டு அழுதான். இறைவனின் பல்வேறு விதமான நாமங்களைப் பாடி ஆரவாரம் செய்தான். தன்னுடைய சிவந்த கைகளை தலையில் வைத்து தொழுதான், ஆடினான், பாடினான். கீழே விழுந்து வணங்கினான். துள்ளிக் குதித்து ஓடினான். என்று கம்பன் பிரகலாதனுடைய அந்த உற்சாகத்தை அற்புதமாக காட்டுகின்றார். மிக சிறந்த பக்தன் பிரஹலாதன். அவனைப் போல், நம்பிக்கையோடு நரசிங்கனை வேண்டிக் கொண்டால், நிச்சயம் அவர் நம்மைக் காத்தருள்வார்!

The post நினைத்தாலே போதும் நரசிங்கன் ஓடோடி வருவார்… appeared first on Dinakaran.

Tags : Narasinghan ,Lord Sriman Narayanan ,Narasimha ,Dasavatharas ,
× RELATED நலன்களை வாரி வாரி வழங்கும் ஸ்ரீநரசிம்மனைக் கொண்டாடுவோம்!