×

மாமியாரை கூலிப்படை ஏவி கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை 5 பேருக்கு இரட்டை ஆயுள் திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை, மே 21: திருவண்ணாமலையில் கூலிப்படையை ஏவி மாமியாரை கொலை செய்த மருமகள் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை தாமரை நகர் 10வது தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமாள். அவரது மனைவி ஆதிலட்சுமி(60). கடந்த 5.1.2017 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆதிலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து ஆதிலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 5 நபர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுதொடர்பாக, ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ஆதிலட்சுமிக்கும் அவரது மருமகள் சத்யாவுக்கும் இடையே, தனி குடும்பம் நடத்த அனுமதிப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சென்னையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்த சத்யா, இதுகுறித்து அவரது அண்ணன் பிரபுவிடம் முறையிட்டதும் ஆத்திரமடைந்த சத்யாவின் அண்ணன் பிரபு, கூலிப்படையை வைத்து தங்கையின் மாமியார் ஆதிலட்சுமியை படுகொலை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆதிலட்சுமியின் மருமகள் சத்தியா, அவரது அண்ணன் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரபு, திருவண்ணாமலை சமுத்திரம் நகரை சேர்ந்த ஆனந்தவேல் மகன் ஹானெஸ்ட் ராஜ், செல்வம் மகன் சரண்ராஜ், ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன், துராபலி தெருவை சேர்ந்த அப்துல்பரூக் மகன் முகமதுஅலி ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில், சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், கூலிப்படையை ஏவி மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் சத்யாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், அவரது அண்ணன் பிரபு, கூலிப்படையை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ், சரண்ராஜ், பத்ரி நாராயணன், முகமது அலி ஆகிய 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் தலா ₹3 ஆயிரம் அபராதம் விதித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மாமியாரை கூலிப்படை ஏவி கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை 5 பேருக்கு இரட்டை ஆயுள் திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Mahila Court ,Thiruvannamalai ,Mahila Court ,AV ,Tiruvannamalai ,Thiruvannamalai Thamarai Nagar 10th street ,Perumal ,
× RELATED திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு...