அரியலூர், மே 20:மக்காச்சோள பயிரில் உருவாகும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்காச்சோள சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மை காலமாக மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.எனவே, விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடும் முன்பு வயலை கோடை உழவு செய்து, வயலில் ஏற்கனவே உள்ள பூச்சிகளின் முட்டைகளை அழிக்க வேண்டும். தொடர்ந்து ஒரே சமயத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.மேலும், மக்காச்சோளம் பயிரிடும் போது ஊடு பயிராக பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை பயிரிடலாம். ஏக்கருக்கு 10 இடங்களில் பறவைகள் அமர தாங்கிகள் அமைக்க வேண்டும். இதனால் விதைத்த 30 நாள்கள் வரை படைப்புழு வராமல் தடுக்கலாம்.
அதன் பிறகு, ஏக்கருக்கு 15 எண்ணிக்கையில் கவர்ச்சி பொறிகளை அமைக்கலாம். தொடர்ந்து, பூச்சிகளை தாக்கும் பூஞ்சானங்களான மெட்டாரைசியம் அணிசோபிளே அல்லது பெவேரியா பேசியானா இவற்றில் ஒன்றை ஒரு லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் நீரில் கலந்து கை தெளிப்பான் மூலம் 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.படைப்புழு அதிகரிக்கும் நிலையில், 15 முதல் 20 நாள்களில் அசாடிரக்ட்டின் ஒரு சதவீத ஈசி 400 மி.லிட்டர் அளவு அல்லர் இமாமெட்டின் பென்சோயெட் 5 எஸ்ஜி 80 கிராம் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45 நாள்கள் வளர்ந்த நிலையில் புழுக்கள் தென்பட்டால், ஸ்மைனிட்டோரம் 12 எஸ்சி 100 மி.லிட்டர் அல்லது நல்லூரான் 10 இசி என்ற மருந்தை 300மி.லிட்டர் இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.65 நாட்களுக்கு பிறகு தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்சி 80 மி.லிட்டர் அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்சி 80 மி.லிட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், கூடுதல் விவரங்களை அரியலூர் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.
The post மக்காச்சோள பயிரில் உருவாகும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் appeared first on Dinakaran.