தா.பழூர், நவ.5: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேங்கி கிடக்கும் நீர் மற்றும் குளம் , குட்டை, ஏரி போன்ற இடங்களில் அதிக அளவில் ஆகாய தாமரை காணப்படுகின்றன. இவற்றை அழிக்க முடியாத காரணத்தினால் இடம் பெயர்ந்தாலும் உயிருடன் இருந்து வருகின்றன. தற்போது துவங்கிய வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இவை இருந்த இடத்தில் எல்லாம் தற்போது துளிர்விட துவங்கி உள்ளன. பெரிய அளவிலான நீர் நிலைகளில் பூக்கவும் துவங்கி உள்ளது. இது பார்ப்பவர்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளது. இந்த ஆகாய தாமரை இது வெங்காயம் போன்ற அமைப்பை கொண்டுள்ளதால் இவை வெங்காயத் தாமரை எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மிதக்கும் நீர்வாழ் தாவரமாகும். இது நீரில் மிதந்து வாழக்கூடியத் தாவரமாகும். இதன் தண்டுகளில் காற்று நிரப்பப்பட்டு இருப்பதால் இவை மிதப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.
இதன் பூக்கள் ஊதா நிறப்பூக்களாக இருப்பதால் அனைவரையும் கவரும் வகையில் இருக்கின்றன. இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள வெங்காயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாக இருந்து வருகிறது. இந்த செடியானது ஏதோ சில இடங்களில் உள்ள நீர் நிலைகளில் காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதிக அளவில் அனைத்து ஏரி குளங்கள் என பல்வேறு பகுதிகளில் சிறு குளம் முதல் பெரிய ஏரி வரை அதிக அளவில் காணப்படுகிறது.
இதன் மூலம் பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும் பயன் ஒரு புறம் உள்ளது. சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. வெங்காயத்தாமரையின் மக்கிய பகுதிகளை உரமாகவும் பயன்படுத்தலாம்.
The post தா.பழூர் அருகே குட்டையில் பூத்துக்குலுங்கும் ஆகாய தாமரை appeared first on Dinakaran.