×

வாகனங்களில் மின்னணு தராசு எடுத்துச்சென்று ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வினியோகிக்க வேண்டும்: கூட்டுறவு பதிவாளர் உத்தரவு

வேலூர், மே 20: நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து செல்லும் வாகனங்களில் மின்னணு தராசு எடுத்துச்சென்று சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே அவற்றை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. பொது விநியோகத்திட்ட பொருள்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரிபார்க்கக் கூடிய மின்னணு தராசு எடுத்துச்செல்ல வேண்டும். நியாய விலைக்கடைகளில் பொருட்களை வழங்கும்போது அவற்றை மறு எடையிட்டு பணியாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். பொருட்களின் எடையை சரிபார்க்கக்கூடிய தராசுகளை கூட்டுறவுத்துறையின் சம்பந்தப்பட்ட முதன்மைச் சங்கங்களே வழங்க வேண்டும்.

நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து பொருட்களை நியாய விலைக்கடைகளுக்கு வேகமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து விலகிச் செல்லக்கூடாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்படுவதையும், நியாய விலைக்கடைகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் 60 கிலோ எடை சரிபார்க்கக் கூடிய மின்னணு தராசு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பொது விநியோகத்திட்ட நகர்வு பணிகளை எந்தவித புகார்களுக்கும் இடமில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.

The post வாகனங்களில் மின்னணு தராசு எடுத்துச்சென்று ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வினியோகிக்க வேண்டும்: கூட்டுறவு பதிவாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu ,operative ,Subbaiyan ,Dinakaran ,
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே...