×

உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி: ஒடுகத்தூரில் கொட்டித்தீர்த்த கோடை மழை

ஒடுகத்தூர், மே 20: ஒடுகத்தூரில் கொட்டித்தீர்த்த ேகாடை மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன்கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதேபோல், ஜவ்வாதுமலை தொடர்களில் பெய்த கோடை மழையால் நேற்று அதிகாலை ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு உத்திர காவிரி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே, மேலரசம்பட்டு- தீர்த்தம் செல்லக்கூடிய சாலையில் ஆற்றின் குறுக்கே சுமார் ₹5 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இதற்காக ஏராளமான கட்டுமான பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் சுமார் ₹1 லட்சம் மதிப்புள்ள மேம்பால கட்டுமான பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், ஒடுகத்தூர்- நேமந்தபுரம் செல்லும் ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலம் வெள்ள நீரால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால், தரை பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஆத்துமேடு, வெங்கனப்பாளையம் வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் வெள்ளநீர் குறைந்ததும் மீண்டும் தரை பாலம் வழியாக இயல்பான போக்குவரத்து தொடங்கியது. இதேபோல், குருவராஜபாளையம் பகுதியில் இருந்து பாலப்பாடி கிராமத்திற்கு செல்லும் வகையில் உத்திர காவிரி ஆற்றின் குறுக்கே தரை பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த தரை பாலம் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால், அங்கு தற்காலிகமாக மண் தரை பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் மண் தரை பாலம் முற்றிலுமாக சேதமடைந்து அடித்து செல்லப்பட்டு, இருந்த தடமே தெரியாமல் போனது. இதனால், பாலப்பாடி கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி மராட்டியபாளையம் வழியாக சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலனுக்காக ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், உத்திர காவிரி ஆற்றில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள், கிணறுகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், குடிநீர் பிரச்னை ஓரளவு தீர்ந்துள்ளது என்று பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அதேபோல், தற்போது ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நிலக்கடலை பயிரிட்டு வருகின்றனர். இந்த மழை அதற்கு ஏற்றவாறு பெய்ததால் விவசாயிகள் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர்.ஒடுகத்தூரில் கனமழை காரணமாக மேலரசம்பட்டு உத்திர காவிரி ஆற்றில் நேற்று திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

The post உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி: ஒடுகத்தூரில் கொட்டித்தீர்த்த கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Uttara Cauvery ,Odugathur ,Utter Cauvery ,Odukathur ,Vellore district ,Javvadumalai ,Dinakaran ,
× RELATED (வேலூர்) கிராம நிர்வாக உதவியாளருக்கு...