- பாக் வெளியுறவு அமைச்சர்
- இஸ்லாமாபாத்
- பாக்கிஸ்தான்
- வெளியுறவு அமைச்சர்
- இந்தியா
- பாகிஸ்தான் மக்கள் கட்சி
- ஷர்மிலா பருகி
- பாக்கித்தான் பாராளுமன்றம்
- தின மலர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்பட்டதால் இந்தியாவுடனான வர்த்தக உறவு 2019ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறினார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பி ஷர்மிளா பரூக்கி, அண்டை நாடுகள் குறிப்பாக இந்தியாவுடனான வர்த்தக சவால்கள் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், ‘‘புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா 200 சதவீத வரி விதித்தது. காஷ்மீருக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்தது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நடைபெற்று வந்த வர்த்தகமும் நின்று விட்டது. 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அரசியல் சட்டம் 370 வது பிரிவை இந்திய நாடாளுமன்றம் ரத்து செய்ததை அடுத்து,இந்தியா உடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்து விட்டது. இந்த முடிவினால், அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதுகிறோம். ஜம்மு காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்னைகளிலும் ஆக்கப்பூர்வமான, தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமைதி மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பு இந்தியாவிடம் தான் உள்ளது’’ என்றார்.
The post அதிக வரிவிதிப்பால் 2019 முதல் இந்தியாவுடன் வர்த்தகம் நிறுத்தம்: பாக்.வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் appeared first on Dinakaran.