×

₹12 கோடியில் புதிய ஷெட்டர்கள் பொருத்தும் பணி தீவிரம்

சின்னசேலம், மே 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தபோதிலும் அணையின் பகுதியிலுள்ள கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே நீரை சேமித்து வைக்கின்றனர். அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி கடலூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் மணிமுத்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி அணை கட்டும்போது 2 ஷெட்டர்களை கொண்டு கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் பெரு வெள்ளம் ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அதற்கு பக்கத்திலேயே மேலும் 2 ஷெட்டர்களை கொண்ட புதிய திறப்பு கட்டப்பட்டுள்ளது.

தற்போது அதிக நீர்வரத்து இருந்ததால் 4 ஷெட்டர்களிலும் தண்ணீர் திறந்துவிடும் வகையில் உள்ளது. இந்நிலையில் அணை கட்டப்படும்போது பொருத்தப்பட்ட 2 ஷெட்டர்களை மாற்றிவிட்டு அணையின் பாதுகாப்பு கருதி புதிய ஷெட்டர்களை பொருத்த பொதுப்பணித்துறை நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, நபார்டு திட்டத்தில் அதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அதற்கான பணி தொடங்கப்பட்டது. தற்போது 2 தானியங்கி ஷெட்டர்களை பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை மழை பெய்து வருவதால் கல்வராயன்மலையில் இருந்து அணைக்கு அதிகளவு நீர்வர வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.

The post ₹12 கோடியில் புதிய ஷெட்டர்கள் பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Komuki dam ,Kalvarayanmalai ,Kallakurichi district ,Komuki river ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு