×

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை

சென்னை, மே 18: பூந்தமல்லி அருகே வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 18 நாய்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு சொந்தமான வீட்டை, பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை இவரது பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம். இதற்கென பிரியா ஒரு தொகையை பெற்றுக்கொண்டு நாய்களை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரியாவின் வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் வீட்டில் அடைக்கப்பட்டிருந்த நாய்களுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படவில்லை. உணவின்றி பசியால் வாடிய நாய்கள் தொடர்ந்து குரைத்தபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. மேலும், நாய்கள் வெறிபிடித்ததுபோல் சண்டையிட்டுக் கொண்டது. நாய்களின் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் நாய்கள் அடைக்கப்பட்டிருந்த வீட்டை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்த தகவலை விலங்குகள் நலவாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த விலங்குகள் நல வாரிய அமைப்பின் ஓய்வு பெற்ற மருத்துவர் மதனகோபால் தலைமையிலான பணியாளர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பசியால் வாடியபடி கிடந்த 18 நாய்களை மீட்டு உணவளித்தனர். பின்னர், நாய்களை பாதுகாப்பாக ஒரு வாகனத்தில் ஏற்றினர். பராமரிப்பிற்காக விட்டுச் சென்ற நாய்கள் உணவின்றி தவித்த தகவலை அறிந்து அதன் உரிமையாளர்கள் பிரியாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர், மீட்கப்பட்ட நாய்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Animal Welfare Board ,Chennai ,Animal welfare ,Kattupakkam ,Krithika ,Indira Nagar ,Priya ,Dinakaran ,
× RELATED பூந்தமல்ல நகராட்சியில் 250 பணியாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை