×

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை


திங்கள்சந்தை: நாகர்கோவில் அருகே வீட்டின் ரோட்டோரம் இசை கருவிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வேன், அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை அம்பேத்கார் நகர் காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல். அவரது மகன் சுரேஷ் (48). செண்டை மேளங்கள் வாசிக்கும் இசைக் கலைஞர். சுரேஷ் தனக்கு சொந்தமான வேனில் இசை குழுவினரை அழைத்துச் சென்று திருமணம் மற்றும் விழாக்களில் செண்டை மேளம் உள்ளிட்ட இசை கருவிகள் இசைப்பது வழக்கம். அதன்படி கடந்த 15ம் தேதி சுரேஷ் இசைக் குழுவினருடன் ஆளுரில் ஒரு விழாவில் செண்டை மேளம் வாசித்தனர்.

பின்னர் விழா முடிந்து செண்டை மேளம் உள்ளிட்ட கருவிகளை வேனில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு வந்தனர். செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்களுடன் இன்னொரு விழாவிற்கு நாளை செல்ல வேண்டி இருந்ததால் வேனை வழக்கமாக நிறுத்தும் சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க இன்ஜினியரிங் கல்லூரி அருகே அம்பேத்கர் நகர் செல்லும் சாலையின் ஓரமாக நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை வேன் திடீரென தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுரேஷிற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சுரேஷ் இரணியல் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். எனினும் வேன் மற்றும் வேனில் இருந்த இசை கருவிகள் என முழுவதுமாக எரிந்து விட்டது. வேனில் எரிந்து நாசமான இசை கருவிகளின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் வரை இருக்கும் என்று சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். வேன் எப்படி எரிந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. எலக்ட்ரிக் கோளாறால் வேன் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீவைத்து சென்றனரா? என்பது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Vitalivel ,Sungankadai Ambedkar Nagar colony ,Nagargo ,Suresh ,Dinakaran ,
× RELATED போதையில் வாகனம் ஓட்டிய 47 பேர் மீது வழக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம்