திருவாரூர், மே 17: பொட்டலமிடப்பட்ட திண்பண்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவினை தவறாமல் குறிப்பிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் பொது செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் உப்பின் அளவை குறைத்தாலே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும் என்கின்ற நிலையில் உலக சுகாதார நிறுவனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் நாட்டின் பயன்பாட்டுக்கு தேவையான உப்பு பெரும்பாலும் நமது நாட்டிலேயே தயாராகிறது. இந்தியாவில் உப்பு உற்பத்தியில் முதலாவதாக குஜராத்தும், அதற்கு அடுத்தபடியாக தமிழகமும் விளங்குகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் வேதாரண்யம், மரக்காணம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மற்ற மாவட்டங்களில் விளையும் உப்பினை விட தூத்துக்குடி மாவட்டத்தில் விளையும் உப்பு சுவை மிக்கதாக விளங்குகிறது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்றாலும், நம் வாழ்க்கைக்கு, குறிப்பாக நாம் உண்ணும் உணவிற்கு பொருந்திய ஒன்று. உப்பு சேர்க்காமல் உணவின் அசல் சுவையே தெரியாது. அதே போல, அதிக உப்பு சேர்த்தாலும் சாப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இது தான் சரியான அளவு என்பதை எதை வைத்தும் அளவிட முடியாது. அந்த அளவிற்கு நாம் உண்ணும் உணவில் மிக முக்கிய பங்கு வகிப்பது உப்புதான்.
இந்நிலையில் நாம் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30 சதவிகிதம் குறைத்துக்கொள்ள வேண்டுமென ஒரு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் எனப்படும் உப்பு சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்சனைகள் நேரிடுவதாக எச்சரித்துள்ளது.
எனவே நாம் உண்னும் உணவில் மற்றும், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிப்ஸ் மற்றும் தின்பண்டங்களில் உப்பின் அளவை சரி பார்க்கும் இடத்தில் பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவை பொட்டலங்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்கின்ற நடைமுறையை கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அப்போது தான் நாள் ஒன்றுக்கு எவ்வளவு சதவிகிதம் உப்பு உடலுக்குள் செல்கிறது என கணக்கிட்டு அதற்கேற்றவாறு உப்பை குறைத்துகொள்ள முடியும். இவ்வாறு ரமேஷ் தெரிவித்துள்ளார்.
The post வெயில் தணித்த நல்ல மழை பொட்டலமிடப்பட்ட திண்பண்டங்களில் உப்பின் அளவை தவறாமல் குறிப்பிட வேண்டும் appeared first on Dinakaran.