×
Saravana Stores

அரியலூர் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து விபத்து தாய், 3 குழந்தைகள் படுகாயம் டாக்டர்களின் அலட்சி போக்கை கண்டித்து பொதுக்கள் சாலை மறியல்

அரியலூர், மே 16: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல்நிலை மோசமான பிறகு, மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூருக்கு பரிந்துரை செய்த மருத்துவர் களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் மெயின் ரோட்டில் வசிப்பவர் ரமேஷ். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை அவ்வழியாக சென்ற லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரமேஷ் வீட்டின் சுவற்றை உடைத்து உள்ளே புகுந்தது. அப்போது வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷின் மனைவி அம்பிகா, அவரது குழந்தைகளான ராஜேஷ், ரம்யா, சுபாஷ் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நான்கு பேரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் ரமேஷின் வீடு முற்றிலும் சேதம் அடைந்ததோடு, வீட்டிலிருந்த பிரிட்ஜ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்தது. அரியலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தனர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சந்திரன் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்கள் நேற்று கூறியுள்ளனர்.

மருத்துவமனை தரப்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும், உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மறுத்துவிட்டு நேற்று காலம் தாழ்த்தி அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியதை கண்டித்து, உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி கம்பெனி நிர்வாகத்தில் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும், குழந்தைகளின் உடல்நிலையை சரியாக கவனிக்காத மருத்துவத்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசமிட்டனர். மேலும் பிரதான அரியலூர் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்பொழுது அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அரியலூர் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், குழந்தையை சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல ஒத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

The post அரியலூர் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து விபத்து தாய், 3 குழந்தைகள் படுகாயம் டாக்டர்களின் அலட்சி போக்கை கண்டித்து பொதுக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Government Medical College Hospital ,Thanjavur ,Pudupalayam ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவக் கல்லூரி...