சென்னை, மே 16: சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 7 மணி நேரத்திற்கு பின் சீரானதையடுத்து மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் – செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதனால் பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டது. இந்நிலையில் அவசரகால பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது. பச்சை வழித்தடம் வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும். நீலநிற வழித்தடம் (விம்கோ நகர் டிப்போ முதல் விமான நிலையம் வரை) மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் (சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை வரை) வார நாள் அட்டவணைப்படி வழக்கம் போல் செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து மெட்ரோ அதிகாரிகளின் தீவிர முயற்சியால் 7 மணி நேரத்திற்குள் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் சென்ட்ரலில் இருந்து, அண்ணாநகர் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதிக்கு செல்பவர்கள் 20 நிமிடங்களில் செல்ல வேண்டிய பயணத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் பேருந்து, ஆட்டோ போன்ற இதர போக்குவரத்தை பயன்படுத்தினர். இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறியதாவது: மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 7 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது appeared first on Dinakaran.