×
Saravana Stores

ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல்

ஈரோடு, மே 15: ஈரோட்டில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் இ-சேவை மையங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சேவை மையங்கள் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையங்கள் மூலம் அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அரசு இ-சேவை மையங்கள் இல்லாத நகர்ப்புற பகுதிகளில் அரசின் சேவைகள் எளிதில் பெறும் வண்ணம் தனியார் சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று, தமிழ்நாடு மின்னாளுமை முகமை வாயிலாக பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டு தனியார் இ-சேவை மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

இதில், ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உட்பட 16 இடங்களில் நேரடியாக அரசு இ-சேவை மையங்களும், பல்வேறு இடங்களில் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள் செயல்படுகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அரசு இ-சேவை மையங்கள் தவிர தனியார் இ-சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை விட அதிகளவில் சேவை கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக அரசு இ-சேவை சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டால், தனியார் இ-சேவை மையங்களில் அவர்களுக்கு தகுந்தார் போல சேவை கட்டணத்தை ரூ.250 முதல் ரூ.400 வரை வசூலிக்கின்றனர். அரசு இ-சேவை மையத்தை விட 4 மடங்கு கட்டணம் அதிகமாக இருப்பதாக தனியார் இ-சேவை மைய உரிமையாளர்களிடம் பொதுமக்கள் கேட்டால், பல லட்ச ரூபாய் செலவு செய்து உரிமம் பெற்று இ-சேவை மையம் நடத்தி வருகிறோம். அந்த பணத்தை இப்படி தான் வசூலிப்போம் என கறாராக பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகளவில் சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இ-சேவை மையங்களை கண்காணித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் இ-சேவை மையங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்