சத்தியமங்கலம், மே 15: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை பெரும்பள்ளம் அணை அருகே உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரங்களில் நடமாடுகிறது. ஆண் யானைக்கு உடல்நலம் குன்றியதால் தீவனம் எதுவும் உட்கொள்ளாமல் பகல் நேரங்களில் தரிசு நிலங்களில் சுற்றித்திரிவதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பழனிச்சாமி கூறும்போது: பெரும்பள்ளம் அணை பகுதியில் நடமாடும் காட்டு யானையை கண்காணித்து வருகிறோம். அந்த யானை தண்ணீர் குடிப்பதற்காக பெரும்பள்ளம் அணைக்கு பகல் நேரத்தில் வருகிறது. வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தீவனம் தேடி யானை வனப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளது. யானையின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை appeared first on Dinakaran.