திருவண்ணாமலை, மே 15: திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 12,386 மாணவிகள் பயனடைந்துள்ளனர். மேலும், தற்போது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள 9,221 மாணவிகளுக்கு அதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், தொடர்ந்து உயர்கல்வியை பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பான திட்டம் புதுமைப் பெண் திட்டமாகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் எனப்படும் புதுமைப் பெண் திட்டத்தை கடந்த 5.9.2022 அன்று முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம், உயர்கல்வி பெறும் மாணவிகளின் வாழ்வில் மிகப்பெரும் மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதந்தோறும் ₹1000 வீதம் அவர்களுடைய வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்திருந்தால் போதுமானது. ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் படிக்கும் மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
மேலும், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவிகளும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். அதோடு, வேறு திட்டங்களில் நிதியுதவி பெறும் மாணவிகளும், கூடுதலாக இத்திட்டத்தில் உதவித்தொகை பெற முடியும். கலை மற்றும் அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவிகளுக்கு, உதவித்தொகையாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. மேலும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும், இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 2.73 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ₹1,000 நிதியுதவி பெற்று பயன்பெறுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை 12,368 மாணவிகள் மாதந்தோறும் ₹1,000 பெறுகின்றனர். அதில், 3,571 மாணவிகள் தங்களுடைய கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளனர். மேலும், 2023-2024ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 146 அரசு பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய 9,998 மாணவிகளில் 9,221 பேர் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தகுதி பெற்றுள்ளனர். எனவே, அரசு பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள 9,221 மாணவிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் தொடர்ந்து படித்தவர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே, தேர்ச்சி பெற்றுள்ள பெரும்பான்மையான மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் வரும் கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து பயன்பெற தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post புதுமைப் பெண் திட்டத்தில் 12,386 மாணவிகள் பயனடைந்துள்ளனர் * இந்த ஆண்டு 9,221 மாணவிகளுக்கு வாய்ப்பு * கல்லூரி முடிக்கும் வரை மாதம் ₹1000 உதவித்தொகை திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.