×

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் 2 பேர் கைது செங்கம் அருகே கந்துவட்டி வசூலிக்க சென்றபோது

செங்கம், அக்.24: செங்கம் அருகே கந்துவட்டி வசூலிக்க சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ்(45). இவரது நண்பர் ராஜ்குமார்(36). இவர்கள் இருவரும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நரசிங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு கடன் கொடுத்துள்ளனர். அவரிடம் பணம் வசூல் செய்வதற்காக கடந்த 21ம் தேதி செல்வராஜ் மற்றும் ராஜ்குமார் சென்றனர். அப்போது வீட்டில் அந்த பெண் இல்லை. அவரது மகளான 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதையறிந்த செல்வராஜ், ராஜ்குமார் ஆகிய இருவரும் வீட்டுக்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இதையடுத்து இருவரும், ‘நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது’ எனக்கூறி மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், வீடு திரும்பிய தாயிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்கள் தடுப்பு பிரிவு நல அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரிக்குமாறு செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து செல்வராஜ் மற்றும் ராஜ்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், இருவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் 2 பேர் கைது செங்கம் அருகே கந்துவட்டி வசூலிக்க சென்றபோது appeared first on Dinakaran.

Tags : Pozzo ,Chengam ,Boxo ,Selvaraj ,Thornapadi ,Thiruvannamalai District, Chengam ,Rajkumar ,Dinakaran ,
× RELATED செங்கம் அருகே தீபவிழா முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்