×
Saravana Stores

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை: சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை, அக்.21: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 102.70 அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு பரவலான மழை பெய்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை நீடிக்கிறது.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. திருவண்ணாமலையில் 2 மிமீ, செங்கம் 8.6 மிமீ, போளூர் 10.60 மிமீ, ஜமுனாமரத்தூர் 18 மிமீ, தண்டராம்பட்டு 5.6 மிமீ, ஆரணி 28 மிமீ, செய்யாறு 5 மிமீ, வந்தவாசி 3.30 மிமீ, கீழ்பென்னாத்தூர் 2.6 மிமீ, வெம்பாக்கம் 12 மிமீ, சேத்துப்பட்டு 6.80 மிமீ மழை பதிவானது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை கடந்து விட்டதால், அணையிலிருந்து வினாடிக்கு 1,820 கன அடி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், பாம்பாறு அணைக்கட்டில் இருந்தும் வினாடிக்கு 340 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

எனவே, சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி, வினாடிக்கு 2,180 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 102.70 அடியாகவும், கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மி.கனஅடியில் தற்போது 4165 மி.கன அடியாகவும் உள்ளது.

மேலும், குப்பனத்தம் அணைக்கு வினாடிக்கு 35 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 54.15 அடியாகவும், கொள்ளளவு 577 மி.கன அடியாகவும் உள்ளது. அணைக்கு தற்போது வரும் 35 கன அடியும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. மிருகண்டா அணைக்கு வினாடிக்கு 40 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 18.37 அடியாகவும், கொள்ளளவு 62.41 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 557 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 55.53 அடியாகவும், கொள்ளளவு 219 மி.கன அடியாகவும் உள்ளது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை: சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Chatanur dam ,Thiruvannamalai ,Tamil Nadu ,
× RELATED விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்