×

மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!

பிரபஞ்சத்தில், நம்முடைய பூ உலகத்தில் மட்டும்தான் உயிர்கள் இருக்கின்றன. அதனால், இதனை “கர்மபூமி” என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பூமி, பிரபஞ்சத்தின் ஒரு சின்ன… சிறிய கோள். இந்தக் கோள், தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றது. சூரியனைச் சுற்றுகின்றது. இயல்பாகச் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் எல்லாம் ஒரே மாதிரியாக இல்லை. கடல் இருக்கிறது, மலை இருக்கிறது, நதி இருக்கிறது, காடு இருக்கிறது. அதைப் போலவே, திடீரென்று மழை அடிக்கிறது. அதற்கு நேர் எதிராக வெயில் காய்கிறது. நீங்கள் உற்றுக் கவனித்தால், ஒரே மாதிரியாக விடிந்து ஒரே மாதிரியாக அஸ்தமிக்கும் ஒவ்வொரு நாட்களிலும், விதவிதமாக காரியங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்தக் காரியங்களில் நாமும் இருக்கிறோம். ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். காரணங்கள் இல்லாத காரியங்கள் இருக்க முடியுமா? இலை அசைகிறது என்று சொன்னால், காற்று அடிக்கிறது என்றுதானே பொருள். அந்தக் காற்று அடிப்பதற்கு என்ன காரணம் என்பதைகவனித்தால், வேறு ஏதோ ஒரு இலையோ மரமோ அசைந்திருக்கும். அது காற்றை கிளப்பியிருக்கும். அந்தக் காற்று, இந்த இலையை அசைத்து இருக்கும். காரண காரியங்கள் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும் என்பதுதான் பிரபஞ்ச விதி.சில காரணங்களை நம்மால் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

சில காரணங்களை நாம் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடிக்க முடியாததால் காரணம் இல்லாமல் இருக்குமா?பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்தவர்களுக்கும், அதன் செயல்பாட்டை புரிந்து கொண்டவர்களுக்கும் உலகத்தில் நடக்கக் கூடிய எந்த காரியங்களும் புரிந்துகொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.அவர்களுக்கு கேள்வி எதுவும் எழாது. ஆம்; அது அப்படித்தான் நடக்கும்; அப்படித்தான் நடந்தாக வேண்டும்; அதுதான் விதி என்பார்கள். இந்த விதி என்பது அற்புதமான வார்த்தை. எது, எப்படி, எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு விதி என்று பெயர். இந்த விதி மாற்ற முடியாது. நாம் மாற்றிவிடலாம் என்று நினைத்தால் விபரீதம்தான் நடக்கும். விதியை மாற்றி அமைக்க முடியும் என்று நினைத்தால், அதற்கும் அந்த விதி வழிவிட வேண்டும். இதைப் புரிந்து கொண்டால், நாம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட முடியும்.

பிரம்மத்தை புரிந்துகொள்ள முடியும். படைத்தவனை புரிந்து கொள்ள முடியும். நம்மைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு உதவுவதுதான் ராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்கள்.இயற்கை சில காரியங்களை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அதற்கான காரணங்கள் தானே உருவாகிவிடும். ஏதோ பழைய இதிகாச கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு நாம் பேசுகிறோம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. முதல் உலகப் போரை எடுத்துக் கொள்ளுங்கள். எதற்காக முதல் உலகப் போர் நடந்தது? அதற்கு யார் காரணம்? காவ்ரீலோ பிரின்சிப் என்ற ஒரு போசுனிய செர்பிய இளைஞன்தான் காரணம். அவன் பிளாக் ஹேண்ட் அமைப்பைச் சேர்ந்தவன். அவன் ஆஸ்திரியா – அங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டைக் கொலை செய்து விடுகிறான்.

ஆஸ்திரியா – அங்கேரி, செர்பியாவை இதற்குக் குற்றம் சாட்டியது. 9 மில்லியன் மக்களைக் கொன்ற முதல் உலகப் போரின் காரணம் இங்கே இருந்துதான் துவங்குகிறது. ஒரு இளைஞனின் நடவடிக்கை காரணமாக, 28 சூன் 1914 அன்று உலகப் போராக உருவெடுத்தது. சரி, இரண்டாம் உலகப் போர்?20 ஆண்டுகால அமைதியற்ற இடைவெளிக்குப் பிறகு, முதலாம் உலகப் போரினால் தீர்க்கப்படாத சர்ச்சைகளின் தொடர்ச்சியாக இரண்டாம் உலகப்போர் 40,000,000 – 50,000,000 வரை மனிதர்கள் சாகும்படி செய்தது. இதை மஹாபாரதத்தோடும் இணைத்துப் பார்க்கலாம்? பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த குருஷேத்ரப் போருக்கு யார் காரணம்? ஏன் இத்தனை மக்கள் இறக்க வேண்டும்?
எப்பொழுதோ திரௌபதி துரியோதனனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாள், அதை மனதில் வைத்துக்கொண்டு துரியோதனன், தங்களைவிட பலசாலியாக இருக்கின்றார்களே என்று பொறாமைப் பட்டு, பாண்டவர்களை பழி வாங்குவதற்கு ஒரு காரணமாகக் கொண்டான்.

அவனுடைய பழி உணர்வுக்கு தாய் மாமனான சகுனி, வேறு ஒரு சொந்தக் காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு தூபம் போட்டான். இப்பொழுது நாம் சகுனிதான் காரணம்; துரியோதனன்தான் காரணம்; திரௌபதிதான் காரணம் என்றெல்லாம் நடந்த நிகழ்வுகளை மேலோட்டமாக வைத்துக் கொண்டு, யார் மீதாவது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இதே மகாபாரதத்தில் ஒரு அற்புதமான பாட்டு இருக்கிறது.எதிர்கால நிகழ்வுகளை ஊகிக்கும் அறிவும், உள்ளுணர்வும் படைத்த சகா தேவன் உணர்ந்து கொண்டு கண்ணனிடத்திலே சொல்லுகின்றான். ‘‘கண்ணா, இந்தப் போர் நடப்பதற்கு துரியோதனனோ, சகுனியோ, திருதராஷ்டிர பாண்டவர்களோ, துரோபதியோ காரணம் அல்ல. இந்த பூமியின் பாரத்தை தீர்ப்பதற்கு நீ முடிவெடுத்துவிட்டாய். அதற்கு ஒரு காரணம் உனக்கு தேவைப்படுகின்றது. அதற்கு இந்தப் பாரதப் போரை நீ பயன்படுத்திக் கொள்ளுகின்றாய். காரியத்தை முடிவெடுத்த பிறகு அதற்கான காரணங்களை நீ உருவாக்கிக் கொள்வது எளிதாக இருக்கிறது.

``நீ பாரத அமரில் யாவரையும் நீறு ஆக்கிப்
பூ பாரம் தீர்க்கப் புகுந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர்ஏறே! கோவிந்தா! நீ அன்றிப்
மா பாரம் தீர்க்க மற்றார்கொல் வல்லாரே’’
அதேதான் ராமாயணத்திலும் நடக்கிறது.

அறுபதாயிரம் ஆண்டு காலம் அற்புதமாக ஆண்டு, தனக்கு எந்தப் பகையும் இல்லாமல், ஏக சக்கரவர்த்தியாக திகழ்ந்த, தசரதனையும், தசரதன் ஆண்ட அயோத்தியையும், தலைகீழாகச் செய்தது யார்? தசரதனுக்கு எதிரியாக இருந்த மன்னர்கள் அல்ல, அவரோடு போர் தொடுத்த பகைவர்கள் அல்ல, அவனுடைய அரண்மனையில் மிகச் சாதாரணமாக இருந்த வயதான முதுகுவளைந்த ஒரு தாதிப்பெண் என்பதை நீங்கள் யோசித்துப் பார்த்தால், மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும் என்கின்ற உண்மை தெரியவரும்.

தேஜஸ்வி

The post மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்! appeared first on Dinakaran.

Tags : Karmabhoomi ,earth ,sun ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி