- மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை
- EU சாலை மேம்பாட்டு நிறுவனம்
- மாமல்லபுரத்தில்
- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை 4 நெடுஞ்சாலை
- ஒன்றிய சாலை அபிவிருத்தி
- யூனியன் சாலை மேம்பாட்டு நிறுவனம்
- தின மலர்
மாமல்லபுரம், மே 14: மாமல்லபுரம் – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச்சாலை விரிவாக்கப்
பணிகள் ₹1270 கோடி மதிப்பீட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 18 மாதங்களில் நிறைவு பெறும் என ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலை, வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பிலும், சென்னைக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், கிழக்கு கடற்கரை சாலை எப்போதுமே வாகனங்கள் நிறைந்து பரபரப்பாகவே காணப்படுவது வழக்கம்.
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை செல்லும் சாலையொட்டி தக்ஷிண சித்ரா, முட்டுக்காடு படகு குழாம், கோவளம் நீலக்கொடி கடற்கரை, வட நெம்மேலி பாம்பு மற்றும் முதலை பண்ணை, மாமல்லபுரம் பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்கள், முதலியார் குப்பம் படகு குழாம், ஆலம்பரை கோட்டை உள்ளிட்ட முன்னணி சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், திருப்போரூர் முருகன் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், மாமல்லபுரம் தலசயனபெருமாள், கடம்பாடி மாரி சின்னம்மன், அணைகட்டு செல்வ விநாயகர், கடலூர் அக்னீஸ்வரர், கூவத்தூர் அங்காளம்மன், சூனாம்பேடு வரதராஜ பெருமாள், செய்யூர் வால்மிகநாதர் மற்றும் கரியமாணிக்க பெருமாள் கோயில்களுக்கு செல்வதற்கு ஏராளமானோர் வந்து கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து செல்கின்றனர்.
சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தாம்பரம், வண்டலூர், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு சுங்கச்சாவடி, ஆத்தூர் சுங்கச்சாவடிகளை விரைவில் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால், விரைவில் தென் மாவட்டங்களுக்கு சென்று சேருவதற்காக கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையை, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. இந்த சாலை, மிகவும் குறுகிய சாலையாக இருந்ததாலும், எதிரே வரும் வாகனங்களுக்கு மற்ற வாகனங்கள் வழிவிட்டு ஒதுங்க முடியாமல் பல்வேறு விபத்துகள் நடந்தது.
இந்த விபத்துகளில், பலர் கை, கால்கள் முறிந்தும், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கியும் உயிரிழந்தனர். மேலும், இச்சாலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிய நெடுஞ்சாலையாக மாற்றி, மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 90 கிமீ தூரம் வரை ₹1270 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்க கடந்த 2018ம் ஆண்டு முடிவெடுத்தது. சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவழி சாலையாக இருந்தது. கடந்த 1998ம் ஆண்டு அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி நேரடி பார்வையில், ஒரு குழுவை அமைத்து இரு வழிச்சாலையாக விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, டெண்டர் விடப்பட்டு, அச்சாலை இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, தற்போது வரை வாகனங்கள் தடையின்றி சென்று வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி சாலை விபத்துகளை கட்டுப்படுத்த சென்னை அக்கரை பகுதியில் இருந்து மாமல்லபுரம் நுழைவு வாயில் பகுதி வரை 30 கிமீ நீளத்துக்கு 2018ம் ஆண்டு 4 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
முதலில், இந்த சாலையை பராமரித்து, பாதுகாப்பதற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து, 2002ம் ஆண்டு முதல் சுங்கவரிச் சாலையாக மாற்றப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், கடந்த 2022ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டுகளாக கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தூய்மையாக பராமரித்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும், இச்சாலையை மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தி, அடிக்கடி நடக்கும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையிலும், வாகனங்கள் தடையின்றி விரைவாக சென்று சேர்கின்ற வகையிலும் ஒன்றிய அரசு முடிவெடுத்து, இதற்காக ₹1270 கோடி நிதியை ஒதுக்கி கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
இதில், முதல் கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே 30 கிமீ தூரம், 2வது கட்டமாக முகையூர் – மரக்காணம் வரை 30 கிமீ தூரம், 3வது கட்டமாக மரக்காணம் – புதுச்சேரி வரை 30 கிமீ தூரம் என மொத்தம் 90 கிமீ தூரம் வரை 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த முடிவு செய்து தற்போது மாமல்லபுரம் – முகையூர் இடையே பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவு பகுதியில் ஒரு மேம்பாலம், பூஞ்சேரி சந்திப்பில் ஒரு மேம்பாலம், மரக்காணம் அடுத்த கூணிமேட்டில் ஒரு மேம்பாலம் என 3 உயர்மட்ட மேம்பாலங்களும், மாமல்லபுரம் அடுத்த மணமை, குன்னத்தூர், வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம், முதலியார்குப்பம், சீக்கினாங்குப்பம், ஓதியூர் எல்லையம்மன் கோயில், விளம்பூர், கடப்பாக்கம், மரக்காணம், கூணிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 38 சிறிய பாலங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கூவத்தூர் அடுத்த வடபட்டினம், மரக்காணம் அடுத்த தேன்பாக்கம், கூணிமேடு உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு சுங்கச்சாவடி என 3 சுங்கச்சாவடிகளும் அமைய உள்ளது.
இந்நிலையில், 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், மரங்கள், கட்டிடங்கள், சிசிடிவி கேமராக்கள், வாகன வேக கட்டுப்பாட்டு கருவிகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் பூஞ்சேரி கூட்ரோடு, கடம்பாடி, மணமை, குன்னத்தூர், வெங்கப்பாக்கம், பூந்தண்டலம், விட்டிலாபுரம், வாயலூர், வேப்பஞ்சேரி, காத்தான்கடை, கடலூர், கூவத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏரி மண் கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும், சில இடங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டி தார் ஊற்றி 4 வழிச்சாலை சாலை விரிவுபடுத்தும் பணியும், மேம்பாலம் மற்றும் சிறிய பாலங்கள் கட்டும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
இப்பணிகளில், தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தலையில் துண்டை கட்டுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு 4 வழிச்சாலை விரிவாக்க பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘மாமல்லபுரம் – முகையூர் இடையிலான சாலை இரு வழிச்சாலையாக உள்ளதாலும், அதிக வாகன போக்குவரத்து காரணமாக கடம்பாடி, மணமை, கல்பாக்கம், வாயலூர், காத்தான்கடை, கூவத்தூர், வடபட்டினம், தென்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் படுகாயம் அடைகின்றனர். ஒரு சிலர், உயிரிழந்து விடுகின்றனர்.
இதனை, தடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, மாமல்லபுரம் – முகையூர் இடையே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள நிலங்களை வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மூலம் அளவீடு செய்யும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி, மணமை பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிக்கு முன்பே எத்தனை மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடையூராக உள்ளது.
எத்தனை பேரின், பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள் தேவைப்படுகிறது என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 2வது கட்டமாக முகையூர் – மரக்காணம் இடையேயும், 3வது கட்டமாக மரக்காணம் – புச்சேரி இடையேயும் படிப்படியாக அளவீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. 4 வழிச்சாலைக்கு, தேவைப்படும் நிலங்களுக்கு பட்டா உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் தொகையானது தங்கு தடையின்றி படிப்படியாக செலுத்தப்படும். மேலும், புறம்போக்கு நிலம் பிரச்னை உள்ள இடங்களை கையகப்படுத்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவர்களின் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த, 4 வழிச்சாலை திட்டம் மாமல்லபுரம் – புதுச்சேரி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை படிப்படியாக நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சாலை அமைக்க ஆங்காங்கே மண் பரிசோதனை செய்யும் பணியும் நடந்து வருகிறது. அதேபோல், மேம்பாலம் மற்றும் சிறிய மேம்பாலம் கட்டுவதற்கான மண் சோதனையும் நடந்து வருகிறது. இதுவரை, 5434 பேரின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், தேவைப்பட்டால் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கையகப்படுத்தப்படும். தற்போது, 25 சதவீத பணிகள் முடிந்துள்ளது. அனைத்து, பணிகளும் 18 மாதங்களில் முழுமை பெறும் என்றனர்.
பனை மரங்கள் நட வேண்டும்
4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக பல ஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டது. பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, கிழக்கு கடற்கரை சாலையொட்டி தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரமும், உடலுக்கு சுத்தமான ஆக்சிஜனை தரக்கூடிய அசோக மரம் மற்றும் அரளி மரங்கள் நட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நான்குமுனை சந்திப்பில் ரவுண்டானா, சிக்னல்கள்
மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி சந்திப்பு, வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம், வாயலூர், கூவத்தூர், சீக்கினாங்குப்பம், எல்லையம்மன் கோயில், கடப்பாக்கம், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் ரவுண்டானா மற்றும் சிக்னல்கள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பூங்கா
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் பலர் இயற்கை அழகை ரசித்தபடி பயணிக்கும் வகையில், முக்கிய இடங்களில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிசிடிவி, வேக கட்டுப்பாட்டு கருவிகள்
கிழக்கு கடற்கரை சாலையில் கொலை, கொள்ளை, வாகன திருட்டு, செயின் பறிப்பு, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் 360 டிகிரியில் சுழன்று கண்காணிக்கும் வகையில் கேமராக்களும், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளும் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரப்பர் வேகத்தடை, பெயர் பலகை
மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, ரப்பர் வேகத்தடை அமைக்கவும், வளைவு பகுதிக்கு சில மீட்டருக்கு முன்பு வளைவு பகுதி உள்ளது மெதுவாக செல்ல வேண்டும் என பெயர் பலகைகள் அமைக்குமாறு வாகன ஓட்டிகள் கூறினர்.
The post ₹1270 கோடியில் மாமல்லபுரம் – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் விறுவிறு: 18 மாதங்களில் நிறைவு பெறும்; ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.