×
Saravana Stores

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் புதிதாக பால் கொள்முதலை தொடங்கவில்லை: ஆவின் அதிகாரிகள் விளக்கம்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் புதிதாக பால் கொள்முதலை தொடங்கவில்லை என ஆவின் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குஜராத்தின் அமுல் நிறுவனம், தமிழக வட மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பால் கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆவினுக்கு ஆபத்து ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த மே, 25ல் முதல்வர், அமுல், தமிழகத்தில் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக்கோரி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் தமிழக அரசு, ஆவின் கொள்முதலை அதிகப்படுத்தல், கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அமுல், முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு இடங்களில் பால் கொள்முதல், குளிரூட்டும் மையங்கள் அமைத்துள்ளன. அந்த மையம் அமைத்து ஒரு மாதத்தில் தர்மபுரியில், 6,000 லிட்டர், கிருஷ்ணகிரியில், 4,000 லிட்டர் கொள்முதல் செய்து ஆந்திராவுக்கு அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், போச்சம்பள்ளியில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலை தொடங்கி உள்ளதாக வெளியான தகவலுக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரியில் வாடகை கட்டடத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைத்தது. தற்போது வரை பால் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான எந்த மையத்தையும் அமுல் நிறுவனம் அமைக்கவில்லை. ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை 65,000 லிட்டரில் இருந்து 85,000 லிட்டராக அதிகரித்துள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பால் விற்பனையாளர்கள் போன்று அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரியில் பால் கொள்முதல் செய்து வருவதாகவும் ஆவின் தெரிவித்துள்ளது. தனியார் பால் விற்பனையாளர்கள் கிருஷ்ணகிரியில் தினமும் 9,000 லிட்டர் பால்தான் கொள்முதல் செய்கின்றனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் புதிதாக பால் கொள்முதலை தொடங்கவில்லை: ஆவின் அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Amul ,Krishnagiri district ,Avin ,CHENNAI ,Aavin ,Amul Company ,Gujarat ,Tamil Nadu ,Dharmapuri ,Krishnagiri ,Thiruvannamalai ,Vellore ,Ranipet ,Kanchipuram ,Tiruvallur ,
× RELATED சபரிமலை செல்ல மாலை போடும் முன்பு...