×
Saravana Stores

மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் டேங்கர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுக்கரை : கேரளாவில் இருந்து கோவையில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனத்திற்கு கேஸ் நிரப்பி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள், கோவையில் உள்ள பாரத் கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் போதிய இடவசதி இல்லாததால், மதுக்கரை ஆர்.டி.ஓ. செக்போஸ்ட் அருகே திருமலையம் பாளையம் பிரிவில் தனியார் நடத்தி வரும் லாரி பேட்டையில் நிறுத்தி வைத்து, கோவையில் இருந்து அழைக்கும்போது ஒவ்வொரு லாரியாக வந்து இறக்கி விட்டு செல்வது வழக்கம். தனியார் நடத்தும் இந்த லாரி பேட்டையில் போதிய இடவசதி இல்லாததால் பெரும்பாலான டேங்கர் லாரிகள் அங்குள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த தனியார் லாரி பேட்டையில் தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாததால் இந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் தவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த லாரி பேட்டையில் நிறுத்தியிருந்த டேங்கர் லாரிகள் மீது சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் டேங்கில் இருந்து கேஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து, 2 கி.மீ தூரம் வரை உள்ள கடைகள் சாத்தப்பட்டு, செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பாரத் கேஸ் நிறுவன பொறியாளர்கள் போராடி கட்டுப்படுத்தினர். அப்போது அந்த சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் போகும் அச்சத்தில் தவித்து வந்தனர்.

மேலும் இங்கு கேஸ் லாரிகள் நிற்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,வேறு வழியின்றி கேஸ் லாரிகளை வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கேஸ் லாரிகள் தொடர்ந்து அந்த லாரி பேட்டையிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மதுக்கரை ஆர்.டி.ஒ.செக்போஸ்ட் அருகே செயல்பட்டு வரும் தனியார் லாரி பேட்டையில் போதிய இடவசதி இல்லாததால் நூற்றுக்கணக்கான கேஸ் நிரப்பி வரும் டேங்கர் லாரிகள் அங்குள்ள சர்விஸ் ரோட்டில் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்: இந்த லாரி பேட்டையில் கேஸ் லாரிகள் நிற்பதற்கு தேவையான எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை,மேலும் இந்த லாரி பேட்டைக்கு மிக அருகில் தேங்காய் தொட்டிகளை எரித்து கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதனால் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு லாரிகள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

The post மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் டேங்கர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Madhukarai RTO ,Madhukarai ,Kerala ,Bharat Gas Company ,Coimbatore ,Bharat Gas ,Coimbatore, Madhukarai RTO ,Dinakaran ,
× RELATED சர்வீஸ் ரோட்டின் வழியாக பேருந்துகள்...