ஹூக்ளி: ‘சந்தேஷ்காலி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக, பாதிக்கப்பட்ட பெண்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டுகின்றனர்’ என பிரதமர் மோடி பிரசாரத்தில் குறிப்பிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாரக்பூர், ஹூக்ளியில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எப்போதையும் விட இம்முறை காங்கிரசின் வெற்றி மிக மிக குறைவாக இருக்கும். அக்கட்சி இளவரசரின் (ராகுல் காந்தி) வயதை விட குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி சகோதரிகள், தாய்மார்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை பார்க்கிறோம். பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்திய குற்றவாளி ஷாஜகான் ஷேக் என்பதற்காகவே அவரை காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் துடிக்கிறது. இதற்காக ஒவ்வொரு தந்திரத்தையும் அவர்கள் செய்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை திரிணாமுலின் குண்டர்கள் மிரட்டுகிறார்கள். மேற்கு வங்கத்தில் ராமரின் பெயரையோ, ராம நவமியை கொண்டாடவோ முடியாத நிலை அளவுக்கு வாக்கு வங்கி அரசியலுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அடிமையாகி உள்ளது. இதனால் இங்கு இந்துக்கள் இரண்டாம் தர மக்களைப் போல் மாற்றப்பட்டுள்ளனர். மனிதகுலத்தை பாதுகாக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) வில்லனாக காட்டுகின்றனர். மோடி இருக்கும் வரை சிஏஏ சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. எஸ்சி, எஸ்டி, ஓபிசியின் உரிமையை பறித்து, மத அடிப்படையில் யாரும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. ராம நவமி கொண்டாடுவதை யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோயில் தொடர்பான தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post குற்றவாளிகளை பாதுகாக்கும் திரிணாமுல்; சந்தேஷ்காலி பெண்களை அச்சுறுத்தும் குண்டர்கள்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.