×

கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை:  விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம்  வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

சென்னை, மே 12: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 1986ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 37 வருடங்களாக 100 படுக்கை வசதிகளுடன் சிறிய அளவில் செயல்பட்ட இந்த மருத்துவமனையை சீரமைத்து பெரிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, திமுக ஆட்சி அமைந்ததும் 300 படுக்கை வசதியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புது பொலிவுடன் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையை புனரமைப்பதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 புறநோயாளிகள் வீதம் வருடத்திற்கு 4.5 லட்சம் பேர் வந்து சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் மருத்துவமனை புனரமைக்கப்பட்ட பின்பு ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 புறநோயாளிகள் வீதம் ஆண்டுக்கு 6 லட்சம் புறநோயாளிகள் தற்போது பயனடைந்து வருகின்றனர். இதேபோல முன்பு தினசரி 60 முதல் 70 பேர் வரை உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். ஆண்டுக்கு 3000 பேர் மட்டுமே பயனடைந்து வந்தனர். தற்பொழுது நாளொன்றுக்கு நூறு முதல் 120 நோயாளிகள் சிகிச்சை பெற்று ஆண்டிற்கு 12000 நோயாளிகள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இங்கு தற்போது 25 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு 12 படுக்கை வசதியுடன் அதிநவீன சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் டயாலிசிஸ் பிரிவு, 4 அறுவை சிகிச்சை அரங்குகள் 24 மணி நேரமும் இயங்கும் ஆய்வகம், எக்ஸ்ரே இசிஜி பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் வருடத்திற்கு 55 ஆயிரம் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் விபத்து மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள், 250 இதய நோய் நோயாளிகள், 400க்கும் மேற்பட்ட விஷம் அருந்திய நோயாளிகள், 250 பக்கவாத நோயாளிகள், 200 தீக்காய நோயாளிகள் என இந்த சதவீத அடிப்படையில் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இங்கு வருடத்திற்கு 2000 நோயாளிகளுக்கு கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளும் 4 ஆயிரம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது ₹110 கோடி செலவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் இந்த மருத்துவமனை கட்டிடம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 890 சதுர அடியில் 6 தளங்களுடன் 556 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கட்டிடம் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தில் தரைதளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள், நவீன சலவையகம், மத்திய கிருமி நீக்கல் துறை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவை வரவுள்ளன. முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகள் தங்க வைக்கப்படும் வார்டுகள் உள்ளிட்டவை வரவுள்ளன. 2 மற்றும் 3ம் தளத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட வார்டு மற்றும் பொது மருத்துவ வார்டுகள் தனி அறைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை பிரிவு, குழந்தைகள் வார்டு, தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் வரவுள்ளன. 4 மற்றும் 5 மற்றும் 6ம் தளங்களில் சிறப்பு புறநோயாளி பிரிவு ஆய்வகம், நீரிழிவு வார்டு, குடல் சம்பந்தமான பிரச்னைகளுக்கான புற்றுநோய் வார்டு உள்ளிட்டவை வர உள்ளன. மேலும் இக்கட்டிடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வழியிடம், நவீன கழிப்பிடம், நான்கு மின் தூக்கிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவமனைக் கான பணிகள்விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்சென்ைனபோல வடசென்னையிலும்…
தென் சென்னை தொகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிண்டியில் கலைஞர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியது போல வடசென்னை மாவட்ட மக்களுக்கு குறிப்பாக கொளத்தூர் தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை அளிப்பதற்காக இந்த மருத்துவமனை மிகப்பெரிய அளவில் தற்போது அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு இந்த மருத்துவமனை திறக்கப்பட்டால் வடசென்னை மக்கள் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஜிஎச் போன்ற மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு பதிலாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதம்
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஹேமலதா கூறுகையில், ‘‘மிகவும் பழமைவாய்ந்த இந்த மருத்துவமனையில் சிறிய மருத்துவமனையாக இருந்து தற்போது படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 தளங்கள் உள்ள கட்டிடப் பணிகள் முழு எச்சில் நடந்து வருகின்றன. இந்த கட்டிடப் பணிகள் முடிந்து மருத்துவமனை முழுவதும் திறக்கப்பட்டால் கொளத்தூர் மட்டுமின்றி வடசென்னை பகுதிகளை தாண்டி திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற வசதியாக இருக்கும். இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் எனப்படும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் தற்பொழுது கொண்டு வரப்பட உள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்’’ என தெரிவித்தார்.

The post கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை:  விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம்  வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Periyar Nagar, Kolathur block ,North Chennai ,Chennai ,Periyar Nagar Government Suburban Hospital ,Kolathur Assembly Constituency ,Kolathur block ,Periyar Nagar ,
× RELATED சென்னையில் ஆம்புலன்ஸ் செவிலியரை கடித்த விஷப்பூச்சி!!