காஞ்சிபுரம், மே 12: காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. இதனால், சுமார் 100 கோடிக்கு மேல் காஞ்சி பட்டு தேக்கம் அடைந்துள்ளன. இதனால், நெசவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஜரிகையை மார்க் அடிப்படையிலேயே விற்பனை செய்கின்றனர். அதன் அடிப்படையில், ஒரு மார்க் ஜெரியை விலை 21,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுவதால் பட்டு சேலை உற்பத்தியாளர்களும் செய்வதறியாமல் உள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6700க்கும் வெள்ளி ஒரு கிராமுக்கு 86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறியதால் பட்டு சேலை விலையையும் உற்பத்தியாளர்கள் 30 சதவீதம் வரை ஏற்றியுள்ளனர்.தனியார் பட்டு சேலை உற்பத்தியாளர்களும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களும் ஜரிகை விலை ஏற்றம் காரணமாக பட்டு சேலை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். விலையேற்றத்தால் விற்பனை பாதிக்கப்படுவதால் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை 19 ஆயிரம் ரூபாய்க்கும் இந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு கொண்டிருந்த காஞ்சிபுரத்தில் 15க்கும் குறைவான கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். விசைத்தறியில் நெய்த பட்டு புடவை கைத்தறி பட்டுப்புடவை என விற்கப்படுவதாலும் பட்டு புடவை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் அனைவராலும் வாங்க முடியாத விலைக்கு பட்டுப்புடவை தற்போது விலை உயர்ந்து உள்ளது. பல்வேறு காரணங்களால் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் 80 கோடி ரூபாய்க்கு மேல் பட்டுப் புடவை தேங்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மனிதனின் மானம் காக்கும் மகத்தான நெசவு தொழிலை மீட்டெடுக்க துறை சார்ந்த அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி போலி பட்டுப் புடவை விற்பனை மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நெசவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், பாரம்பரியமிக்கப்பட்டு தொழிலை செய்த நெசவாளர்கள் இன்று ஓட்டல் சர்வர் வேலைக்கும், கம்பெனி காவலாளி வேலைக்கும் செல்கின்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி பிவி சீனிவாசன் கூறியதாவது: ஒரு காலத்தில் பாரம்பரியமாக செய்த பட்டு தொழில் இன்று பட்டுப் போகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது பாரம்பரியத்தையும் பட்டையும் மீட்டு எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் பட்டு அணிந்தாலே உங்களை கம்பீரம் தொற்றி கொள்ளும். அந்த வகையில் காஞ்சிபுரம் பாரம்பரியமிக்க பட்டை மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களை அரசு மீட்டு எடுக்க வேண்டும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் தனியார் பட்டு கடைகள் லாபம் சம்பாதிக்கின்றன.
இதற்கு காரணம் யார் என்பதை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும அந்த வகையில் தற்போது 100 கோடிக்கு மேல் பட்டு துணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், இதை நம்பி உள்ள நெசவாளர்கள் வாழ்வு கலக்கம் அடைந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாக அரசும் நெசவாளர் சங்க நிர்வாகிகள், மற்றும் நெசவாளர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய மிக்க பட்டுப் தொழிலை மீட்டெடுக்கவும்,தேக்கம் அடைந்த பட்டு துணிகளை விற்பனை செய்து நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
The post கடந்த ஆண்டை விட 30 சதவீதம் விற்பனை குறைவு ₹100 கோடிக்கு மேல் காஞ்சி பட்டு தேக்கம் appeared first on Dinakaran.