×

50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை மாயம் என புகார்; குடோன்களில் இருந்து எடுத்து வரும் ரேஷன் பொருட்கள் எடை குறைவு: கடை ஊழியர்கள் அதிர்ச்சி

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, சேலையூர், முடிச்சூர், சானடோரியம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் சுமார் 180 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதம்தோறும் தங்களது ரேஷன் அட்டையை பயன்படுத்தி அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த 180 ரேஷன் கடைகளுக்கும் திருவான்மியூர், நந்தனம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் இருந்து ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு பின்னர் ரேஷன் கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், திருவான்மியூர், நந்தனம் பகுதிகளில் உள்ள குடோன்களில் இருந்து ரேஷன் பொருட்களை கொண்டு வந்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதால் போக்குவரத்து சார்ந்த பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் சிட்லபாக்கம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன் புதிதாக திறக்கப்பட்டு இந்த குடோனில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை சார்பில் ஒரு முகவர் போடப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்ட 180 கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இவ்வாறு குடோனில் இருந்து 180 ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ரேஷன் பொருட்கள் அடங்கிய 50 கிலோ மூட்டை ஒவ்வொன்றிலும் மூன்று கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைவான அளவில் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு குடோனில் இருந்து குறைந்த எடையில் ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படும் நிலையில் ரேஷன் கடைகளில்தான் எடை குறைந்தது போல அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களிடம் அபராதம் விதிக்கும் நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரேஷன் கடை ஊழியர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது:
சிட்லபாக்கம் பகுதியில் உள்ள வரதராஜா திரையரங்கம் எதிரே உள்ள குடோனில் இருந்து தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 180 ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சக்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. 180 கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்பதால் ஒரு நாளுக்கு தோராயமாக கோதுமை 500 முதல் 1000 மூட்டை, அரிசி 3000 முதல் 4000 மூட்டை, துவரம் பருப்பு 1000 முதல் 2000 மூட்டை, சர்க்கரை சுமார் 2000 மூட்டை என தினமும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் குடோனுக்கு வருகிறது.

இவ்வாறு வரும் மூட்டைகளை குடோனில் இருந்து 180 கடைகளுக்கும் பிரித்து கொடுப்பார்கள். அவ்வாறு பிரித்து கொடுக்கப்படும் மூடைகளை ரேஷன் கடை ஊழியர்கள் 25 நாட்களுக்குள் சப்ளை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, 25ம் தேதியிலிருந்து 1ம் தேதி வரை 20 சதவீதம் கொடுப்பார்கள், 1ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை 40 சதவீதம் கொடுப்பார்கள், 10ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை 40 சதவீதம் கொடுப்பார்கள். ஆனால், இவ்வாறு சப்ளை செய்யப்படும் ரேஷன் பொருட்கள் அடங்கிய மூட்டையில் 50 கிலோவிற்கு பதில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை அளவு குறைவாகவே உள்ளது. இப்படி குறைந்த அளவில் உள்ள பொருட்களுக்கு, ஒரு கிலோவிற்கு 130 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒரு மூட்டைக்கு சுமார் 3 கிலோ என்றால் 10 மூட்டைகளுக்கு 30 கிலோ குறைகிறது. இதற்கு அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதித்தால் ஒரு கடைக்கு 4000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். குடோனில் இருந்து தான் ரேஷன் பொருட்கள் குறைந்த அளவில் வந்துள்ளது என அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இதனால் ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் தான் பாதிப்படைகிறார்கள். பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியான அளவில் கொடுக்க வேண்டுமென்றால் குடோனில் இருந்து அனுப்பப்படும் ரேஷன் பொருட்கள் மூட்டையில் பொருட்கள் சரியான அளவில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, ரேஷன் கடைகளுக்கு குடோனில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்கள் எடை சரியாக உள்ளதா என்பதை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடோன் பொறுப்பாளருடன் இணைந்து நடக்கும் மோசடி
குடோனுக்கு ரேஷன் பொருட்கள் வரும்போது சரியான அளவில் தான் வருகிறது. உதாரணத்திற்கு 50 கிலோ பொருள் என்றால் அந்த கோணி பையின் எடை 600 கிராம் என சேர்த்து மொத்தம் ஒரு முட்டையின் எடை 50 கிலோ 600 கிராம் இருக்கும். ஆனால் குடோனில் ஒரு சிலர் கூட்டு சேர்ந்து கொண்டு ஒவ்வொரு மூட்டைகளிலும் மூன்று கிலோ முதல் 5 கிலோ வரை பொருட்களை எடுத்துக் கொள்வதால் அளவு குறைந்து விடுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் பொருட்களை தனியார்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதற்கு குடோன் பொறுப்பாளர் உடந்தையாக செயல்படுகிறார்.

ஒரு நாளைக்கு 500 மூட்டையில் குறைந்தது இரண்டு கிலோ எடுத்தார்கள் என்றால் ஒரு நாளுக்கு ஆயிரம் கிலோ பொருட்கள் எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் ஆயிரம் கிலோ பொருட்களை வெளியே தனியாருக்கு விற்பனை செய்து அதில் வரும் பணத்தை பங்கிட்டு கொள்கிறார்கள். இதுகுறித்து குடோன் பொறுப்பாளரிடம் கேட்டால், எங்கு சென்று வேண்டுமென்றாலும் புகார் தெரிவித்துக் கொள்ளுங்கள் எனக்கு கவலை இல்லை மேல் அதிகாரி வரை பணம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன் என அலட்சியமாக பதில் அளிக்கிறார் என்றும் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

The post 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை மாயம் என புகார்; குடோன்களில் இருந்து எடுத்து வரும் ரேஷன் பொருட்கள் எடை குறைவு: கடை ஊழியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,West Tambaram ,East Tambaram ,Perungalathur ,Birkankarani ,Selaiyur ,Mudichur ,Sanatorium ,Chitlapakkam ,Crompettai ,Pallavaram ,Anakaputhur ,Pammel ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!