புதுடெல்லி: முதல் 2 கட்ட வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்துபுகார் மனு அளித்தனர். மக்களவை தேர்தல் 3 கட்டம் முடிந்து விட்டது. மே 13ல் 4ம் கட்டம் நடக்க உள்ள நிலையில் தொகுதி மற்றும் பூத் வாரியான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று வரை வெளியிடவில்லை. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும் தேர்தல் ஆணையம் மவுனம் சாதித்து வருகிறது.
இதுகுறித்து இந்தியா கூட்டணிதலைவர்கள் நேற்று தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கவலை தெரிவித்ததுடன், பா.ஜ மீது அறித்த தேர்தல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் மனு அளித்தனர். இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், திமுகவின் டிஆர் பாலு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மஹுவா மாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தனர். அதன்பின் அபிஷேக் மனு சிங் கூறியதாவது:
எங்கள் கூட்டணி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. நாங்கள் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் எங்கள் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் மட்டும் 11 புகார்கள் கொடுக்கப்பட்டது குறித்தும், அனைத்துக் கட்சிகளின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் கவலை தெரிவித்தோம். இது தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு பெரிய நம்பிக்கை குறைபாடு, கேள்விக்குறி, கவலை, துயர உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக வெளிப்படுத்தினோம்.
நாங்கள் மோடி, அமித்ஷா மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நோட்டீஸ் அனுப்பினார்கள். குற்றம் செய்தவர்களுக்கு அல்ல. அதற்கு பதிலாக தேர்தல் ஆணைய வரலாற்றில் முதன்முறையாக கட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து கவலை தெரிவித்தோம். இரண்டாவது பிரச்சினை, வாக்களிப்பு சதவீதத்தை இன்று வரை வெளியிடவில்லை. ஒட்டுமொத்த வாக்குப்பதிவிலும் திடீரென 5 முதல் 6 சதவீதம் வரை வாக்கு எண்ணிக்கை அதிகரித்து காட்டப்பட்டுள்ளது. இது தேவையற்ற கேள்விக் கணைகளை எழுப்புகிறது. கடந்த முறை ஆளுங்கட்சி மோசமாக செயல்பட்ட பகுதிகளில் மட்டும் திடீரென இந்த வாக்கு அதிகரிப்பு ஏற்பட்டதா, அல்லது அனைத்து தொகுதிகளிலும் இது நிகழ்ந்ததா. இவை அனைத்தும் தவிர்க்கப்படக் கூடிய கேள்விகள், ஏனெனில் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை, உடனடி விளக்கம் இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உபியில் ஒரு தொகுதியில் 70 ஆயிரம் பேரை வாக்களிக்க விடாமல் சிவப்பு அட்டை
உத்தரபிரதேச காவல்துறை சார்பில் வாக்குச்சாவடி அருகே வரக்கூடாது என்று ஒரு தொகுதியில் 70 ஆயிரம் பேர் வரை சிவப்பு அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார் டேனிஷ் அலி எம்பி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பல ஆயிரம் பேருக்கு போலீசார் உபியில் தடை விதித்து சிவப்பு அட்டை வழங்கினார்கள். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் பலமுறை இந்த பிரச்னையை எழுப்பியுள்ளோம். உத்தரபிரதேசத்தில் ஒரு தொகுதியில் மட்டும் சிவப்பு அட்டை எண்கள் 10,000 முதல் 70,000 பேர் வரை வழங்கப்பட்டது. இதுபற்றி புகார் கூறியதும், எதிர்காலத்தில் அத்தகைய அட்டை வழங்கப்படாது என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது’ என்றார்.
* தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் டி.ஆர்.பாலு பேட்டி
டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பிறகு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுஅளித்த பேட்டியில்,‘‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆளும் பாஜக செய்யும் முறைகேடு குறித்து ஆணையம் ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. குறிப்பாக தமிழ்நாட்டை பொருத்தமட்டில் வாக்குப்பதிவு விவரங்கள் முதன் நாளில் கொடுக்கப்பட்டதற்கும், மறுநாள் தேர்தல் ஆணையம் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.தமிழ்நாடு புதுவை என இரண்டிலும் இந்த குளறுபடி நடந்துள்ளது.இதனால் தேர்தல் ஆணையத்தின் மேல் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகி விட்டது. கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடுத்து நடைபெறவிருக்கும் நான்கு கட்ட தேர்தல்களிலும் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாதவாறு ஆணையம் அதற்குறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஓட்டுப்பதிவு விவரங்களை வெளியிட தாமதம் இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார்: பா.ஜ மீது நடவடிக்கை எடுக்க தாமதிப்பது பற்றியும் கேள்வி appeared first on Dinakaran.