×
Saravana Stores

இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாக். பற்றி பா.ஜ பேசுவது ஏன்? பிரியங்கா காந்தி ஆவேசம்

அமேதி: இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தானைப் பற்றி பா.ஜ ஏன் பேசுகிறது என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவை தேர்தல் 4ம் கட்ட பிரசாரம் இன்று முடிவுக்கு வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசிய பழைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பா.ஜ பரப்பியது. அதில்,’இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்பதால் பாகிஸ்தானுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்கினால் எந்த பயனும் இல்லை. மேலும் பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்து இருந்தார். இந்த பழைய வீடியோ பேச்சு குறித்து பா.ஜ கடும் விமர்சனம் எழுப்பி பிரசாரம் செய்தது. இதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள உண்மையான பிரச்னைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ பயப்பட்டு பழைய வீடியோவை வெளியிட்டு பிரசாரம் செய்கிறது. அந்த வீடியோ எப்போது வெளியிடப்பட்டது என்று நான் கேட்கிறேன். இது பழைய வீடியோ என்றால், இன்று ஏன் அதைப் பற்றி விவாதிக்கிறோம்? இரண்டாவதாக, நான் கேட்க விரும்புகிறேன், தேர்தல் நடப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா? எங்கு தேர்தல் நடக்கின்றன? அவை இந்தியாவில் நடக்கும் போது நாம் ஏன் பாகிஸ்தானைப் பற்றி விவாதிக்கிறோம்?

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அதிக பணவீக்கம் குறித்து விவாதம் ஏன் நடைபெறவில்லை. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். டீசல் முதல் விவசாய பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துவிட்டன, இது ஏன் விவாதிக்கப்படவில்லை? தொழிலாளர்கள் ஏன் சுரண்டப்படுகிறார்கள், போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதைப்பற்றி எல்லாம் பா.ஜ விவாதிக்காது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இந்து-முஸ்லிம் பிரச்னை பற்றி பேசி தேர்தல்களில் வெற்றிபெற விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாக். பற்றி பா.ஜ பேசுவது ஏன்? பிரியங்கா காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Pak ,India ,BJP ,Priyanka Gandhi ,Amethi ,Pakistan ,Lok Sabha elections ,Congress ,Mani Shankar Aiyar ,India, Pakistan ,
× RELATED காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து...