×

உபியில் இந்தியா கூட்டணி புயல் வீசுகிறது மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்: ராகுல்காந்தி உறுதி

கன்னோஜ்: உபியில் இந்தியா கூட்டணி புயல் அடிப்பதால் மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி உபியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். கன்னோஜ், கான்பூர் என பல்வேறு இடங்களில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவுடன் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஜூன் 4 அன்று மோடி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார். இனிமேல் மோடி இந்தியாவின் பிரதமராகப் போவதில்லை என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதமாக என்னிடம் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த 10 ஆண்டுகளில் மோடி 1000 மேடைகளில் பேசியிருப்பார். ஆனால் ஒரு முறை கூட அதானி, அம்பானி பெயரை அவர் சொன்னதில்லை.

பயத்தில் நடுங்கும் போது, ஏதேனும் சக்தியின் பெயரை சொல்லியும், மனதுக்குள் நினைத்தும் என்னை காப்பாற்றுங்கள் என உதவிக்கு அழைப்பார்கள். அதுபோலத்தான் மோடி இப்போது அவரது இரண்டு நண்பர்களின் பெயரை கூறி வருகிறார். இந்தியா கூட்டணி என்னைச் சூழ்ந்து கொண்டது, நான் தோற்றுப் போகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள், அதானி-அம்பானிஜி, என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவரது நண்பர்கள் பெயரை சொல்லி கதறுகிறார். அதானி எந்த டெம்போவில் எந்த வகையான பணத்தை அனுப்புகிறார் என்பதும் அவருக்குத்தான் தெரியும்.

பிரதமருக்கு டெம்போவின் தனிப்பட்ட அனுபவம் உள்ளது. இந்த பேரணிக்கு வரும் தொண்டர்களை தடுக்க உபி பா.ஜ அரசு முயன்றது. ஆனால் அகிலேஷ் யாதவ் கன்னோஜில் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இந்தியா கூட்டணியின் புயலால் உத்தரப்பிரதேசத்தில் பாஜவுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படப் போகிறது. உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் மனதில் உறுதி எழுந்துள்ளதே இதற்கு காரணம். இதே போல் இந்தியா முழுவதும் ஒரு மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் தங்கள் முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டனர். இவ்வாறு ஆவேசமாக பேசினார்.

* 50 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம்
ராகுல்காந்தி பேசுகையில்,’உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 50 இடங்களில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். நாங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்துள்ளோம். இப்போது, ​​​​உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணி 50 இடங்களுக்கு குறையாமல் வெற்றிபெறப் போகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். மற்ற மாநிலங்களில் ஏற்கனவே நாங்கள் பாஜ பயணத்தை நிறுத்தி விட்டோம்’ என்றார்.

* பா.ஜ அவ்வளவுதான் அகிலேஷ் உற்சாகம்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில்,’ இதுவரை நடைபெற்ற 3 கட்ட தேர்தலில் பாஜவுக்கு மிகவும் குறைவான இடங்கள் தான் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ இனி அவ்வளவு தான். நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு அந்த நெடுஞ்சாலை சமாஜ்வாதிகளால் கட்டப்பட்டது என்பது தெரியும்’ என்றார். ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் எம்பி பேசுகையில், ‘இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர பாஜ அரசியல் சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிக்க முயல்பவர்களின் தேர்தல் டெபாசிட் தொகையை நாங்கள் பறிமுதல் செய்வோம். வெறுப்பு காரணமாக நான் சென்ற கோவிலை பாஜவினர் கழுவினார்கள். அவர்களுக்கும் மக்கள் உரிய பதிலடி தருவார்கள்’ என்றார்.

The post உபியில் இந்தியா கூட்டணி புயல் வீசுகிறது மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்: ராகுல்காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,PM ,Rahul Gandhi ,India alliance ,UP ,Congress ,Lok Sabha elections ,Samajwadi ,Kannaj ,Kanpur ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகளை விமர்சித்த மோடி; பசு...