*சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்துள்ளார்
*ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு
திருமலை : ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் உள்ள நிலையில் சந்திரபாபு அறிவித்துள்ள திட்டங்களுக்கு ரூ.12 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பரத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
7 முறை தொடர்ந்து வெற்றி பெற்றதாக கூறும் சந்திரபாபு இந்த தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளவில்லை. சந்திரபாபு ஆட்சியில் ஜென்ம பூமி கமிட்டி என்ற பெயரில் அக்கட்சிக்கு எதிராக உள்ளவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்வது, நிலம் ஆக்கிரமிப்பு செய்வது, போலீசார் மூலம் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது ஆகியவை இருந்தது.
ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 5 ஆண்டுகளில் கட்சி பாகுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் 100 சதவீதம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது. சமமான வளர்ச்சி பெறுவது இலக்காக ஜெகன்மோகன் உள்ளார். எனவே தான் 175 தொகுதிகளில் 175 தொகுதி வெற்றி பெறுவது இலக்காக கொண்டுள்ளோம். குப்பம் தொகுதி உடன் சேர்ந்து 151 இடங்களில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் மீண்டும் ஆட்சியில் தொடர்வர். சந்திரபாபு செய்த வளர்ச்சிகள் குறித்து மக்களிடம் கேட்டால் தெரியும் அவருக்கு உண்டான செல்வாக்கு என்ன என்பது.
சந்திரபாபு அறிவித்துள்ள சுப்பர் சிக்ஸ் தேர்தல் அறிக்கை கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தில் சிலவற்றையும், ஆந்திராவில் ஏற்கனவே செயல்படுத்தும் திட்டங்களை சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 நிதி உதவி என பல்வேறு செய்ய முடியாத திட்டங்களை சந்திரபாபு அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள திட்டங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது.
ஆனால் ஆந்திர மாநிலத்தின் நிதி ரூ.2.40 லட்சம் கோடி ஆகும். அவ்வாறு உள்ள நிலையில் எவ்வாறு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக சந்திரபாபு
பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் ஜெகன்மோகன் ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடர்வதோடு முதியோருக்கு வழங்கக்கூடிய பென்சன் தொகை
ரூ.3000 இருந்து ரூ.3500 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
அந்த ரூ.500 ரூபாய் கூட 2028-2029 ஆம் ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். செய்யும் முடியும் வாக்குறுதிகளை மட்டுமே ஜெகன்மோகன் தேர்தல் அறிக்கையாக வைத்துள்ளார். தேர்தல் அறிக்கையை ஜெகன்மோகன் பகவத் கீதையாகவும், குர்ஆன் ஆகவும், பைபிளாக மதிக்கக் கூடியவர் அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என உறுதியாக கொண்டிருப்பவர்.
ஆனால் சந்திரபாபு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பல அறிவிப்புகளை அறிவிப்பார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் செய்ய மாட்டார் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும். எனவே ஆந்திர மக்கள் ஜெகன்மோகன் வெற்றி பெற செய்வதோடு குப்பம் தொகுதியில் நான் வெற்றி பெறுவதும் உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.
The post ₹2.40 லட்சம் கோடி வருவாய் உள்ள நிலையில் சந்திரபாபு அறிவித்துள்ள திட்டங்களுக்கு ₹12 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது appeared first on Dinakaran.