ஆவடி, மே 10: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் வேலூர் தாலுகா பெரியார் தெருவை சேர்ந்த ஏ.சபரிமணிகண்டன்(31) என்பவர் 12.3.2024 அன்று புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான நெல்லை ஃபுட் ப்ராடக்ட் என்ற நிறுவனத்தார் மாவட்டம் வாரியாக சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தங்கள் நிறுவனத்திற்கு தேவை என்று கொடுத்த விளம்பரத்தை பார்த்தேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாறன் மற்றும் அவரது மகன் அபிஷேக்மாறன் இருவரும் சேர்ந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர். பிறகு என்னை அவரது கம்பெனிக்கு வரவழைத்து நெல்லை உணவு பொருட்களை காண்பித்து நல்ல லாபம் வரும் என்று கூறினார். மேலும் நான் சூப்பர் ஸ்டார்ஹிட் ஆக தேர்வாகி இருப்பதாக கூறி ₹1,50,000 பெற்றுக்கொண்டார்.
எனினும் எந்த ஒரு பொருளும் அனுப்பாமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றினார். இதே போன்று நாகர்கோவில் சேர்ந்த முகமது, சென்னை தி. நகரை சேர்ந்த சீனிவாசன், கன்னியாகுமாரியை சேர்ந்த ததேயுஸ்வில்சன், மதுரையை சேர்ந்த புரட்சிதாசன், நெய்வேலியை சேர்நத் செல்வமணி ஆகிய நபர்களிடம் மொத்தமாக ₹65,82,424 பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார். எனவே வேலை தருவதாக கூறி எங்களிடம் அபகரித்த பணத்தை மீண்டும் பெற்று தர வேண்டும் என இவ்வாறு அந்த கொடுத்த புகாரில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன். சங்கர், ஆய்வாளர் வள்ளி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், தலைமறைவாக இருந்த குற்றவாளியான சென்னை கோவூர் சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்த டி.எம்.மாறன்(49) என்பவரை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள மகன் அபிஷேக் குமார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post உணவு தயாரிப்பு ஏஜென்சி தருவதாக கூறி ₹65 லட்சம் மோசடி: தந்தை கைது மகன் தலைமறைவு appeared first on Dinakaran.