×
Saravana Stores

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு

சென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு இதுவரை 3,65,461 சுற்றுலா பயணிகள் 68,878 வாகனங்களிலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 2,74,211 சுற்றுலா பயணிகள் 42,661 வாகனங்களிலும் பயணிக்க இ-பாஸ் பெற்றுள்ளனர். பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவதால், இந்த ஆண்டு இச்சுற்றுலா தலங்களுக்கு வருகைதர இ-பாஸ் அவசியம் என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் epass.tnega.org என்ற இணைய முகவரியும், ஏதேனும் சந்தேகங்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 0451-2900233, 9442255737 என்ற எண்களுக்கும் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கல்லார் (தூரிபாலம்). குஞ்சப்பணை. கக்கநல்லா (தொரப்பள்ளி மசினகுடி), நாடுகாணி, பாட்டவயல், தாளூர், சோலாடி, நம்பியார்குன்னு, கோட்டூர், மணல்வயல், கக்குண்டி, மதுவந்தல், பூலக்குன்னு, கெத்தை உள்ளிட்ட அனைத்து மாநில மற்றும் மாவட்ட சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுள்ள வாகனங்கள் அனைத்தும் மாவட்டத்திற்குள்அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ.பாஸ் பெற்றுச் செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுழைவாயில்களான காமக்காபட்டி காட்ரோடு, சித்தரேவு, தருமத்துப்பட்டி,
வடகாடு மற்றும் சிவகிரிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது. மேற்கண்ட சோதனைச் சாவடிகளில் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் 24 x 7 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர இன்று (09.05.2024) பிற்பகல் 1 மணி நிலவரப்படி 3,65,461 பயணிகள் 1,280 பேருந்துகளிலும், 49,397 கார்களிலும், 1,191 மினி பேருந்துகளிலும், 10,534 இருசக்கர வாகனங்களிலும், 3,326 வேன் மற்றும் 3,150 இதர வாகனங்கள் என மொத்தம் 68,878 வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் பதிவு செய்து பெற்றுள்ளார்கள். இதில் இன்றைய (09.05.2024) பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 1,56,203 பயணிகள் 31,648 வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் முறையில் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும், நாளை 10.05.2024 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர பிற்பகல் 1 மணி வரை 39,116 பயணிகள் 6,767 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுள்ளனர். மேலும், நேற்றைய தினம் 08.05.2024 அன்று 23,809 பயணிகள் 5,200 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வருகை புரிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வருகை புரிந்த பயணிகளுக்கு சிரமமின்றி இ-பாஸ் பெற்று வழங்கிடும் வகையில் மாநில மற்றும் மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் சுமார் 4,169 வாகனங்களில் 15,707 பயணிகளுக்கு (சுமார் 28.63 சதவீத பயணிகள்) இ-பாஸ் உடனடியாக பதிவு செய்து வழங்கப்பட்டு, மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைதர 09.05.2024 பிற்பகல் 2.27 மணி நிலவரப்படி 2,74,211 பயணிகள் 1,129 பேருந்துகளிலும், 28,804 கார்களிலும், 1,207 மினி பேருந்துகளிலும், 6,830 இருசக்கர வாகனங்களிலும், 3,205 வேன் மற்றும் 1,486 இதர வாகனங்கள் என மொத்தம் 42,661 வாகனங்களில் பயணிக்க இ.பாஸ் பதிவு செய்து பெற்றுள்ளார்கள். இ.பாஸ் அமல்படுத்தப்பட்ட 07.05.2024 முதல் 09.05.2024 பிற்பகல் 2:27
மணி வரை 33,742 பயணிகள் 110 பேருந்துகள், 3,644 கார்கள், 149 மினி பேருந்துகள், 415 இருசக்கர வாகனங்கள், 484 வேன்கன் மற்றும் இதர வாகனங்கள் 309 என மொத்தம் 5,111 வாகனங்களில் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையால் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் கிடைத்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு சிரமமுமின்றி இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருவதாலும், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டதாலும், சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தளங்களையும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கண்டுகளித்து வருகின்றனர்.

The post ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kodaikanal ,Tamil Nadu government ,Chennai ,Nilgiri district ,Dindigul district ,Godaikanal ,
× RELATED அரசு இணைய தளத்தில் ஊட்டி விடுதிகள்,...