- சந்திரபாபு நாயுடு
- ஆந்திரப் பிரதேசம்
- குப்பா
- திருமலா
- குப்பம் சட்டமன்றத் தொகுதி
- சித்தூர் மாவட்டம்
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குப்பம்
திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டமன்ற தொகுதி மாநில எல்லை பகுதியாகும். இந்த தொகுதி கர்நாடக, தமிழக மாநிலங்களின் அருகே உள்ளது. இங்கு 2.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1955ம் ஆண்டு குப்பம் தொகுதி உருவானது. 1983ம் ஆண்டு என்.டி.ராமாராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 1989 முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆந்திராவில் வரும் 13ம்தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரேகட்டமாக நடக்கிறது. இம்முறை ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு, ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். சந்திரபாபுவின் கோட்டையை தகர்க்க தற்போதைய ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் கடும் முயற்சி செய்து வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பரத் என்பவர் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் சீனியரான மறைந்த சந்திரமவுலியின் மகன் ஆவார். சந்திரபாபுவின் கோட்டையை தகர்க்க ஜெகன்மோகன் `ஆபரேஷன் குப்பம்’ என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார்.
இதற்காக குப்பம் தொகுதிக்கு பொறுப்பு அமைச்சராக பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியை முதல்வர் ஜெகன்மோகன் நியமித்தார். அவர், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நூற்று கணக்கான நிர்வாகிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைக்க செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் 80 சதவீத இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. ஆரம்பம் முதலே தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக இருந்த குப்பம் நகராட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கொடி பறக்க தொடங்கியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகனுக்கும், சந்திரபாபுவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. அப்போது ஜெகன்மோகன் பேசுகையில், `அடுத்த தேர்தலில் ஒரு இடம் கூட உங்களுக்கு கிடைக்காமல் உங்களையும் உங்கள் கட்சியையும் தோற்கடிக்கச்செய்வேன்’ என சவால் விட்டார். அதற்கு எதிர்சவாலாக அடுத்த முறை முதல்வராக மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைவேன் எனக்கூறிவிட்டு சந்திரபாபு வெளியேறினார். அதன்பின்னர் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஒருமுறை கூட அவர் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார்.
குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது. சந்திரபாபுவுக்கு ஆதரவாக அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோரும் தனித்தனியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அண்மையில் பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு, வரும் தேர்தலில் குப்பம் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
The post ஆந்திர மாநிலம் குப்பத்தில் 8வது முறையாக வெற்றி பெற்று கோட்டையை பிடிப்பாரா சந்திரபாபு நாயுடு appeared first on Dinakaran.