திருத்தணி, மே 9: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் மயில், பால் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்து சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காவடி மண்டபத்தில் வெள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், விபூதி, கதம்பம், பஞ்சாமிருத அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை தொடர்ந்து பக்தர்கள் அரோகர பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சித்திரை கிருத்திகை விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கிருத்திகை யொட்டி மலைக் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். மாட வீதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலுக்கு அனல் காற்று வீசி வந்த நிலையில், நேற்று வெயில் குறைந்ததால், பக்தர்கள் வெயில் பாதிப்பின்றி வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
புழல்: புழல் ஒற்றைவாடை தெருவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கிருத்திகை திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரை மாத கிருத்திகை திருவிழா நேற்று முன்தினம் கோ பூஜை, கணபதி ஓமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மூலவர் சந்தன தரிசனம் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக செயல் அலுவலர் குமரன், அறங்காவலர் குழுவினர்கள் ரவி, மெடிக்கல் குணசேகரன், லட்சுமி நீதி ராஜன், ஆகியோர் செய்து இருந்தனர்.
நெஞ்சுவலியால் பக்தர் பலி
சென்னை, சோழவரம் அருகே சிறுணியம் கிராமத்தைச் சேர்ந்த முத்து(52) என்பவர் அவரது குடும்பத்துன் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அவரது குடும்பத்துடன் 10 பேர் வந்துள்ளனர். சரவணபொய்கை திருக்குளம் வழியில் திருப்படிகள் ஏறி மலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, முத்துவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்தபோது பக்தர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருத்தணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.