×

திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை

கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார். பி.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டும் என்ற கனவோடு கல்லூரிகளை அணுகிய இவருக்கு பல கல்லூரிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநங்கை அஜிதா கூறியதாவது: வடகோவை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளேன். தற்போது தேர்ச்சி பெற்று உள்ளதால் நான் பி.எஸ்சி. சைக்காலஜி படிக்க விருப்பமாக இருந்தேன். ஆனால், கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் அனுமதி கேட்டபோது திருநங்கை மாணவி என்பதால் என்னால் மற்ற மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படும் என கூறி எனது படிப்பை நிராகரித்துள்ளார்கள். அதேபோல வடகோவை பகுதியில் உள்ள கல்லூரியில் சீட் கேட்டபோது அங்குள்ள நிர்வாகிகள் உங்களால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.

கல்லூரிக்கு சீட் கேட்டு சென்றால் எந்த கழிவறையை நீங்கள் பயன்படுத்துவீர்கள்? என கேள்வியை எல்லாம் கேட்கிறார்கள். இது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கல்வியை நாங்கள் தேடி வந்த நிலையில், தற்போது கவுண்டர் மில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது எனக்கு சீட் கிடைத்துள்ளது. திருநங்கைகளுக்கு கல்வி நிராகரிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. எனவே, அரசு சார்பில் திருநங்கைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ajitha Angam ,Ajitha ,Singhanallur ,Vadacova Municipal Corporation Higher Secondary School ,
× RELATED கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்