திருப்பூர், மே 8: திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக 110 டிகிரிக்கு மேலாக வெயில் அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கத்தரி வெயிலும் துவங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக திருப்பூர் மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தன்னார்வலர் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீரபாண்டி காவல் நிலையம் முன்பு பொதுமக்கள், புகார் அளிக்க வருபவர்களின் தாகம் தணிக்கும் வகையில் காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூர் சரக உதவி கமிஷனர் நந்தினி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகம், தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து போலீசார் பொதுமக்களுக்கு நீர்மோர் வினியோகம் செய்தனர்.
The post வீரபாண்டி காவல்துறை சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.