×
Saravana Stores

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு: பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்கு பெட்டிகள் அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பெருமாள்பட்டு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை, உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு எண்ணும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையத்திற்கு பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.பிரபுசங்கர், ஆவடி காவல் ஆணையர் சங்கர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் ஆகியோர் விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருமானவரித்துறை மற்றும் காவல்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு துறைகள் சார்பாக வரும் அறிக்கைகள் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது தான் முழு விவரம் தெரிய வரும் என்றார். இந்த ஆய்வின் போது ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், பொன்னேரி சப்கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், உதவி செயற்பொறியாளர் வேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்ய பிரசாத், உதவி தேர்தல் அலுவலர்கள் தனலட்சுமி, கற்பகம், கனேஷ், கண்ணன், திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு: பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Perumalpattu ,Tiruvallur ,Kummidipoondi ,Ponneri ,Thiruvallur ,Madhavaram ,Poontamalli ,Avadi ,Parliamentary ,Separate ,
× RELATED மோசமான வானிலை தலைமை தேர்தல் ஆணையர்...