செங்கல்பட்டு: சென்னை ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிக்கிய, 192 கிலோ கஞ்சா மூட்டைகளை செங்கல்பட்டு அருகே காவல் துறை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர். சென்னை ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆவடி சரக காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் அதிரடியாக கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் எரியூட்டும் நிலையத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட 192 கிலோ கஞ்சாவை போலீசார் கொண்டு சென்றனர். ஆவடி சரக காவல் ஆணையர் சங்கர் தலைமையில் கஞ்சா மூட்டைகளை தீயில் போட்டு அழித்தனர்.
The post ஆவடி காவல் சரகத்தில் சிக்கிய 192 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு appeared first on Dinakaran.