மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஏக்கர் பரப்பளவிலான வேலிகாத்தான் மரங்கள் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்துக்கு அருகே ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் அருகே பல ஏக்கரில் வேலிகாத்தான் மரத்தோப்பு ஒன்று உள்ளது. இந்த, வேலிகாத்தான் தோப்பில் நேற்று மதியம் திடீரென மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் ரமேஷ்பாபு மற்றும் வீரர்கள் விரைந்து வந்து, சில மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ பரவாமல் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அங்குள்ள 10 ஏக்கர் பரப்பளவில் வேலிகாத்தான் மரங்கள், புல்வெளி மற்றும் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. திடீர் தீ விபத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த, தீ விபத்தால் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மற்றும் இசிஆர் சாலையில் கரும் புகை மூட்டமாக காணப்பட்டது.
The post திடீர் தீ விபத்தில் 10 ஏக்கர் பரப்பளவிலான வேலிகாத்தான் மரங்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.