×

வெள்ளை ஈ, வாடல் நோய் தாக்கிய தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

விருதுநகர், மே 7: வெப்ப அலையால் தென்னை மரங்களில் வெள்ளை ஈ, வாடல் நோய் தாக்கி லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து வருகிறது. மரத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயமுருகன் தலைமையில் தென்னை விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.

மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலுகாவில் 24 ஆயிரம் ஏக்கரில் நீண்ட கால பயிரான தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை விவசாயத்தை நம்பி 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.  தற்போது அடித்து வரும் கோடை வெயிலின் வெப்ப அலையால் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. தென்னை மர குலைகள் முதல் குருத்து வரை பாதித்து மரங்கள் காப்பு திறன் இன்றி உள்ளது.

மேலும் லட்சக்கணக்கான மரங்கள் கருகி அழிந்து வருகிறது. தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலை துறை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து ஒரு தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தற்போதுள்ள மரங்களை பாதுகாக்க ட்ரோன்கள் மூலம் மரங்களில் போர்க்கால அடிப்படையில் மருந்து தெளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

The post வெள்ளை ஈ, வாடல் நோய் தாக்கிய தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu ,Virudhunagar Collector ,Dinakaran ,
× RELATED மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை...