×

தில்லைவிளாகம் கிராமத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டி தர வேண்டும்: வாசகர்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, மே 19: தில்லைவிளாகம் கிராமத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் நூலக வாசகர்கள் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கோவிலடி கிராமத்தில் சுமார் 50 ஆண்டு பழமையான நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. நூலகம் தொடங்கிய காலத்து வெவ்வேறு பகுதியில் செயல்பட்டு வந்தாலும், கடந்த 1995ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்கும் வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் நூலகத்திற்கென புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்த நூலகத்தில் சுமார் 24 ஆயிரம் புத்தகங்கள் உள்ளது. இதற்கு இந்த கிராமம் மட்டுமின்றி சுற்று பகுதி கிராமத்தில் இருந்து 3,500 வாசகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினந்தோறும் இங்கு வந்து புத்தகங்களை படித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் தற்போது இயங்கும் இந்த கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதாகி உள்ளது. இதனால் சுவர்களும் கட்டிடத்தின் சிலாப்களும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. பல பகுதி சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமாகி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் கசிந்து நூலகத்திற்கு உள்ள புத்தகங்கள் நனைந்து வீணாகி வருகிறது. அதனால் இந்த கட்டிடத்தை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தில்லைவிளாகம் கிராமத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டி தர வேண்டும்: வாசகர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thillavilakam ,Muthuppet ,Tamil Nadu government ,Thillavilagam ,Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்