ஈரோடு, மே 7: ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே நீர் மோர் பந்தல், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் செல்வோர் அங்கு சென்று தங்களது தாகத்தை தணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், வெயிலை சமாளிக்கும் வகையில் நீர் ஆகாரங்கள் வழங்க ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் நேற்று முதல் மாநகராட்சி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நீர் மோர், கம்மங்கூழ் போன்றவை வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினை போக்க மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், 1,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் நீர் மோர், கம்மங்கூழ் போன்றவை இன்று (நேற்று) முதல் வழங்கி வருகிறோம். கோடை வெயில் முடியும் வரை தொடர்ந்து வழங்க உள்ளோம்’’ என கூறினர்.
The post மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல் appeared first on Dinakaran.